தான் இயக்கும் திரைப்படங்களில் சமூகம் சார்ந்த கருத்துக்களை, சாதி அடக்கு முறையால் ஏற்படும் விளைவுகளையும் தைரியமாக காட்சிப்படுத்தி தனக்கென ஒரு ரசிக கூட்டத்தை உருவாக்கியவர் பா ரஞ்சித். அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அடுத்த திரைப்படமான மெட்ராஸில் தமிழ் சினிமா இதுவரை பேசாத அடக்குமுறை அரசியலை கண்முன்னே காண்பித்தார்.
சுவர் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் பா ரஞ்சித் என்பவர் யார் என்ன தமிழ் திரையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அந்த திரைப்படம் வாய்ந்தது. இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பா ரஞ்சித் பெற்றார்.
கபாலி, காலா என இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கிய அவர், அதன் மூலம் சூப்பர் ஸ்டாரை வைத்து சாதிய வன்கொடுமையை ஆழமாக பதிவு செய்தார். இதில் கபாலி திரைப்படத்தை விட காலா படத்தில் அதற்கான இடங்களும் காட்சிகளும் அதிகப்படியாக இருந்தன. ரஜினியின் வசனங்களும் ஆங்காங்கே தெறிக்க விட்டன.
இதன்பிறகு சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை எடுத்தார் ரஞ்சித். குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்த அவர், சார்பட்டா பரம்பரை மூலம் மீண்டும் தனது இயக்கத்தின் திறமையை நிரூபித்தார்.
இப்படியான சூழலில் அவர் அடுத்தபடியாக விக்ரமை வைத்து தங்கலான் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர். ஆங்கிலேய காலகட்டத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் கூலித் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது குறித்து இந்த திரைப்படம் பேசுகிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை எடுத்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ரஞ்சித் ஈடுபட்டிருந்தார். ஆனால் தற்போது அதற்கு முன்பாக ஒரு அரசியல் படத்தை எடுக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தங்கலான் திரைப்படம் வெளியான பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





