தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். அவரது திரைப்படங்கள் சில சமயங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் எந்த ஒரு பெரிய இழப்பும் வைக்காமல் இருந்து வருகிறது. இதனால் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் தளபதி விஜய்.
திரைப்படம் மட்டுமல்லாமல் அவ்வபோது சமூகப் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்காக ஆரம்பம் முதலில் தனது நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சேவைகளில் அவர் இறங்கினார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்குவதை அவர் தொடர்ச்சியாக வைத்திருந்தார்.
இது மட்டுமல்லாமல், அரசியலில் சில முக்கியமான தருணங்களிலும் தனது முகத்தை காட்டினார் விஜய். தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து மரணமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேராகவே சென்றார் விஜய். இப்படி, அரசியல் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்த அவர் அண்மையில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை ஆரம்பித்த உடன் அறிக்கையையும் வெளியிட்ட அவர், தனக்கு அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல புனிதம் என்று குறிப்பிட்டிருந்தார். அரசியலில் ஆழத்தை மட்டுமல்ல நீள அகலத்தையும் தனது முன்னோர்களின் வழி நின்று கட்சி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேசமயம் மத்திய மாநில அரசுகளை மறைமுகமாக சாடி பேசி இருந்த விஜய், இன்னும் ஒப்புக் கொண்டிருக்கும் ஒரு படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் தான் ஈடுபட போவதாக தெரிவித்தார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அவர் மாநாடு ஒன்றை நடத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படியான சூழலில் தனது தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக மகளிர் தலைமையில் அணியை விஜய் அமைத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாநிலச் செயலாளராக விஜயலட்சுமியும், மாநில இணைச் செயலாளராக யாஸ்மினும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பொருளாளராக சம்பத் என்பவரையும் நியமனம் செய்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல் அணியை மகளிர் தலைமையில் விஜய் அமைத்தது பலரிடத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது.





