பாய்ஸ் படத்தில், ஐந்துபேரில் ஒருவராக நடித்திருப்பார் நடிகர் பரத். இந்த படத்தில் தான் இயக்குநர் ஷங்கர் பரத்தை அறிமுகம் செய்தார். தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் படத்தில் முருகன் கேரக்டரில் ஒர்க்ஷாப் மெக்கானிக்காக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து செல்லமே படத்தில் விஷால் மனைவி ரீமாசென் மீது ஆசைப்படும் விடலை பருவ வாலிபனாக நல்ல நடிப்பை பரத் வெளிப்படுத்தி இருந்தார். அடுத்து மெட்டி ஒலி சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் எம் மகன், முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு, பேரரசு இயக்கத்தில் பழனி, வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.
நடிகர் பரத்தை பொறுத்த வரை, மிக இயல்பான நடிகர். நேபாளி படத்தில் தன் காதல் மனைவியை கொன்ற போலீஸ் அதிகாரியை பழிவாங்கும் கேரக்டரில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. அதுபோல் பட்டியல் படத்தில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக ஆர்யா நண்பராக நடித்திருப்பார். அரவாண் படத்தில் காட்டுவாசியாகவும் வித்யாசமாக நடித்திருப்பார்.
பரத் நல்ல நடிகராக இருந்தாலும், நல்ல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவரால் முன்னணி நடிகர் வரிசைக்கு உயர முடியவில்லை. பாய்ஸ் படத்தில் நடித்த 5 பேரில் சித்தார்த் முன்னணி நடிகராக இருக்கிறார். தேவயானி தம்பி நகுல் அவ்வப்போது படங்களில் நடிக்கிறார். தமன், முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். அதுபோல் பரத் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் கொம்பன், தேவராட்டம், சுந்தரபாண்டியன், விருமன் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, ஆர்யாைவ கதாநாயகனாக வைத்து இயக்கிய காதர் பாட்சா என்ற படத்தில் நடிக்க, நடிகர் பரத்தை அழைத்தார். ஆனால் அந்த படத்தில் நடிக்க பரத் சம்மதிக்கவில்லை. வில்லன் கேரக்டர் என்பதால் தவிர்த்து விட்டார்.
தற்போது மீண்டும் பரத்தை, வில்லன் கேரக்டரில் நடிக்க இயக்குநர் முத்தையா அழைத்துள்ளார். அவர் தனது மகனை ஹீரோவாக வைத்து இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க பரத்தை அழைத்துள்ளார். முதலில் அவர் அழைத்து மறுத்துவிட்டோம். மீண்டும் மறுத்தால் அது மரியாதையாக இருக்காது. பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் முத்தையா என்பதால், இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க சம்மதித்துள்ளார் பரத். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ஹீரோ வில்லனாக மாறுகிறார்.





