தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மலையாளம் தமிழ் என இரண்டு சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியது.
தமிழ்நாட்டில் டப் செய்யப்படாமல், இந்த திரைப்படம் வெளியானாலும் இரண்டாம் பாதியில் முழுக்க பெரும்பாலும் தமிழ் மொழியே இடம் பெற்றிருந்ததால் மஞ்சுமல் பாய்ஸ் பலருக்கும் எளிதாக கனெக்ட் ஆனது. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
அதிலும் குறிப்பாக குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலை சரியான நேரத்தில் கனெக்ட் செய்து ஆச்சரியத்தை அளித்தனர் படக் குழுவினர். படத்தின் டைட்டில் கார்டு போடும்போதும் குணா படத்தின் அந்த பாடல் இசைக்கப்பட்டது.
இப்படி ஒவ்வொரு காட்சியும் துல்லியமாக இருந்ததால், மலையாளத்தை விட தமிழில் இந்த திரைப்படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக டொமினோ தாமஸ் நடித்த 2018 திரைப்படம் தமிழில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மலையாள திரைப்படமான மஞ்சம்மல் பாய்ஸ் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது குறித்து, பிரபல மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான விஜயின் லியோ திரைப்படம் தூள் கிளப்பியது.
படம் வெளியாகி 25 நாட்களுக்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினி படத்திற்கும் விஜய் படத்திற்கும் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு தான் வருகிறது. ஒரு மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் ஓடுவது உங்களுக்கு வேண்டுமானால் புதியதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தமிழ் சினிமா ஒன்று கேரளாவில் ஹிட் ஆவது என்பது நிறைய ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம் என்று தெரிவித்துள்ளார்.





