நடிகர் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துவக்க விழா இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் இளையராஜா, கமல்ஹாசன், தனுஷ், படத்தின் டைரக்டர் அருண் மாதேஸ்வரன், இயக்குனர் சங்கத் தலைவர் அருண் மாதேஸ்வரன், கங்கை அமரன், வெற்றி மாறன், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த படத்தின் அறிமுக போஸ்டரை, நடிகர் கமல்ஹாசன் முன்னின்று வெளியிட்டார். அதைத்தொடர்ந்து விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, பல பேருக்கு இரவில் தூக்கமே வராது. அப்போது இளையராஜா பாட்டை கேட்டுவிட்டு தான் தூங்குவோம். ஆனால் நான் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என்று மனதுக்குள் நடித்து பார்த்து தூக்கம் வராமல் இருந்துள்ளேன்.
நான் இளையராஜாவின் ரசிகன் பக்தன். அவரது இசைதான் எனக்கு துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதையும் தாண்டி அவரது இசை எனக்கு ஆசான். நடிப்புன்னா என்னவென்றே தெரியாத காலகட்டத்திலும் சரி, இப்போதும் சரி, நான் நடிப்பதற்கு முன் இளையராஜாவின் இசை அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கும். அதை உள்வாங்கித்தான் நடிப்பேன்.
இளையராஜா வேடத்தில் நடிப்பது பெரிய சவால் என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. இப்பவும் அவரின் இசை எப்படி நடிக்கணும் என்று எனக்குச் சொல்லும். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது கூட இளையராஜா சார், நீங்க முன்னாடி போங்க, உங்க கையை பிடிச்சு நான் பின்னாடி வர்றேன் என்று சொன்னேன். அதற்கு அவர், நான் என்ன உனக்கு கைடா என்று கேட்டார். நீங்க கைடுதான். உங்களை பின்பற்றி தான் நான் வந்துக்கொண்டு இருக்கிறேன்.
மேலும் தனுஷ் பேசுகையில், நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாறு படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒருவர் இளையராஜா. மற்ற ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில் ஒரு ஆசை நிறைவேறப் போகிறது. இது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை தந்துள்ளது, என்று நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷ், இப்படி தனது மாமனாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இப்போது சில ஆண்டுகளாக பிரிந்து இருக்கும் ஐஸ்வர்யா, தனுஷ் மீண்டும் இணைந்தால் மட்டுமே ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிப்பது சாத்தியமாகும். அப்போதுதான் ஐஸ்வர்யா ஒத்துக்கொள்வார். ஆனால் ரஜினி அப்படி விரும்பினால், தனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க அவர் சிவகார்த்திகேயனை தான் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.





