லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். போதைப் பொருட்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தனது முந்தைய திரைப்படமான கைதி திரைப்படத்தின் சில காட்சிகளை, விக்ரம் திரைப்படத்தில் இணைத்து சபாஷ் போட வைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரது இந்த அணுகுமுறை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் எல் சி யு கான்செப்ட் திரை உலகம் முழுவதும் பேசப்பட்டது.
இந்தத் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மொத்தமே 10 நிமிடங்கள் தான் சூர்யா வந்திருப்பார். rolex என்னும் கதாபாத்திரத்தில் தோன்றிய அவரது உடல் மொழியும் மிரட்டலான தோற்றமும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. அதுவும் சூர்யா பேசும் வசனங்களுக்கு திரையரங்குகளில் விசில் சத்தம் தூள் கிளப்பியது.
கிட்டத்தட்ட அந்த படத்தின் வெற்றிக்கு சூர்யாவின் காட்சிகள் மிக முக்கியமாக அமைந்தன. அவர் பேசிய வசனத்தை வைத்து ரசிகர்கள் இன்னும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.
விரைவில் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க போவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் ரோலக்ஸ் திரைப்படம் குறித்து முதல் முறையாக சூர்யாவும் வாய் திறந்து உள்ளார். கங்குவா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, ரோலக்ஸ் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அனேகமாக இது எனது அடுத்த படமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சூர்யா கூறியதைப் பார்த்தால் இதற்கு அடுத்ததாக அவர் ரோலக்ஸ் திரைப்படத்தை தான் எடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





