நடிகர் தனுஷ் நடிப்பில், இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் உருவாகிறது. இந்த படத்தின் துவக்க விழா, முதல் போஸ்டர் அறிமுக விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், இயக்குனர்கள் வெற்றிமாறன், கங்கை அமரன், அருண் மாதேஸ்வரன், சந்தானபாரதி, ஆர்வி உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன், ஆர்மோனியம் பெட்டியை தோளில் சுமந்தபடி, தனுஷ் முதுகுகாட்டி நிற்பது போன்ற அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் சென்ட்ரல் ஸ்டேஷன் முன் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பது போன்று அந்த படத்தில் காணப்படுகிறது.
இந்த புகைப்படத்தின் வாயிலாக, தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இருந்து இளையராஜா, சென்னைக்கு வந்த போது சென்ட்ரல் ஸ்டேஷன் முன் அவர் நின்றதை போன்ற காட்சிதான் இதில் குறியீடாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் இளையராஜா வந்த 1960களில், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் முன், தரமான தார் ரோடு போடப்பட்டு இருந்தது. அதனால் அங்கு சேறும் சகதியுமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
அருண் மாதேஸ்வரன் தான் இளையராஜா படத்தின் டைரக்டர். இவர் ஏற்கனவே கேப்டன் மில்லர் படத்தை டைரக்ட் செய்த போது அந்த படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக சுதந்திர போராட்ட காலகட்டத்தில் ஏகப்பட்ட இந்த படத்தில், இப்போதைய நவீன ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியவர் என்ற விமர்சனத்தை சந்தித்தவர்.
இப்போது இளையராஜா பயோபிக் படத்தின் ஆரம்பமே இப்படி சொதப்பலாக இருக்கிறதே, என சமூக வலைதளங்களில் கலாய்க்க துவங்கி விட்டனர். இதுகுறித்து பதிவு செய்துள்ள சினிமா விமர்சகர் ப்ளுசட்டை மாறனும் தன்னுடைய பங்குக்கு பயங்கரமாக பங்கம் செய்துள்ளார். இதுகுறித்த தனது கவலையை, எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லாத போஸ்டர் டிசைன். அருண் மாதேஸ்வரனும், தனுஷூம் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்துருக்காங்களோ, என அந்த போஸ்டருடன் தனது விமர்சனத்தை செய்திருக்கிறார். ஏற்கனவே இப்படி பல முக்கிய பிரபலங்கள் வாழ்க்கை வரலாறு படங்களை பல இயக்குனர்கள், நடிகர்கள் சொதப்பி சின்னாபின்னாபடுத்தி இருக்கின்றனர். இளையராஜா நிலை என்னாகுமோ என்பது தனுஷ், அருண் மாதேஸ்வரனுக்கே வெளிச்சம் என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.





