நடிகர் டேனியல் பாலாஜி நேற்று முன்தினம் இரவு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்தார். அவரது கண்கள் தானம் பெறப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சிறந்த நடிகராக இருந்தும், தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் அவர் நடித்திருக்கலாம். நிறைய இயக்குனர்கள், நடிகர்கள் அவரை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற பேச்சு இப்போது எழுந்துள்ளது.
ராதிகா சரத்குமார் நடிப்பில் மிக பிரபலமான சீரியல் சித்தி. இதில் டேனியல் என்ற கேரக்டரில் முதன்முறையாக நடித்தவர் பாலாஜி. அதன்பிறகுதான் அவர் டேனியல் பாலாஜியாக மாறினார். பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு படங்களில் அவரது கொடூரத்தனமான வில்லன் நடிப்பை அவரை தவிர வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நடிப்பில் ரசிகர்களை மிரட்டியிருப்பார்.
ஆனால் டேனியல் பாலாஜி தமிழில் நடித்தது மிக குறைவான படங்கள்தான். அவர் இன்னும் நிறைய படங்களில் நடித்திருக்க வேண்டும். இயக்குனர்கள் அவரது முழு திறமையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என இயக்குனர் சேரன் போன்றவர்கள் இப்போது தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் டேனியல் பாலாஜி நிறைய நடித்திருக்கிறார்.
நடிகர் முரளியின் சித்தி மகன்தான் டேனியல் பாலாஜி. அதாவது முரளியின் அப்பாவுக்கு 2 மனைவிகள் முதல் மனைவிக்கு பிறந்தவர் முரளி. 2வது மனைவிக்கு பிறந்தவர் டேனியல் பாலாஜி என்று சொல்லப்படுகிறது. முரளியின் அம்மாவும், டேனியல் பாலாஜியின் அம்மாவும் சகோதரிகள் என்றும் ஒரு தகவல் உள்ளது. முரளி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தும் அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டதில்லை டேனியல் பாலாஜி.
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் இதுகுறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, அண்ணன் முரளி மிகப்பெரிய நடிகராக இருந்தும், அவரிடம் நான் நடிக்க வாய்ப்பு கேட்டதில்லை. சிபாரிசுக்கும் போனது இல்லை. அவரை சந்திக்க நேரில் சென்றாலே, வாய்ப்பு கேட்கிறார் என்ற கெட்ட பெயர் வந்துவிடுமே என்பதற்காகவே அவரை நான் நேரில் சந்திப்பதையே தவிர்த்திருக்கிறேன்.
ஓரிருமுறை மட்டுமே நேரில் சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர், ஏன் நீ இன்னும் வில்லனாகவே நடிச்சுக்கிட்டு இருக்கறே, வில்லனா தான் நடிக்க வேண்டுமா, என என்னைப் பார்த்த கேட்டார். அதற்கு நான், ஹீரோவாக நடிக்கதான் நீங்க இருக்கறீங்களே என்று பதில் கூறினேன். அப்போது அவரது நடிப்பு குறித்து நான் கிண்டலாக பேசியதை அவர் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொண்டார் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் நீடித்திருக்கும் திறமை இருந்தும், 50 வயதில் அண்ணன் முரளி, 48 வயதில் தம்பி டேனியல் பாலாஜி இருவருமே மறைந்துவிட்டனர்.





