நடிகர் பார்த்திபன், இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர். கே பாக்யராஜ் இயக்கிய தாவணிக் கனவுகள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிக்கும் வாய்ப்பை தன் சிஷ்யனுக்கு கே பாக்யராஜ் தந்திருந்தார். இந்த படத்தில் அரும்பு மீசை வாலிபனாக, போஸ்ட் மேன் கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பார்த்திபன்.
அதன்பிறகு பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் செய்த படம்தான் புதிய பாதை. மிகச்சிறந்த படமாக, தேசிய விருதை இந்த படம் பெற்றது. குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிறுவனாக வாழ்க்கையை துவங்கும் பார்த்திபன், ரவுடித்தனம் செய்துக்கொண்டு இருப்பார். அவரால் கெடுக்கப்பட்ட சீதா, அவரை திருமணம் செய்துக்கொண்டு நல்வழிப்படுத்துவார்.
அந்த காலகட்டத்தில் இந்த படம் வெளியான புதிதில் பார்த்திபன் – சீதா நடிப்பை காண தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. 1990களில் வந்த படங்களில் புதிய பாதை பெரிய மாஸ்ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு, ரஜினி அழைத்து பார்த்திபனை பாராட்டிய போது, நான் 100 படங்களில் நடித்த பின் கிடைத்த வரவேற்பை, முதல் படத்திலேயே நீங்கள் பெற்று விட்டீர்கள் என பாராட்டியிருந்தார்.
இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சீதாவையே பார்த்திபன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். நல்ல நட்சத்திர தம்பதியாக வாழ்ந்து வந்த அவர்கள், ஒரு காலகட்டத்துக்கு பிறகு திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். சீதா – பார்த்திபன் பிரிவை பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்தளவுக்கு அன்னியோனியமாக இருவரும் குடும்பம் நடத்தினர்.
அவர்கள் இருவரும் பிரிந்து ஏறக்குறைய பல ஆண்டுகள் ஆன நிலையில், பார்த்திபன் மறுமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். ஆனால் நடிகை சீதா, சீரியல்களில் நடித்த போது உடன் நடித்த சதீஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருடன் சில ஆண்டுகளே அவரது உறவு நீடித்த நிலையில், அவரையும் விட்டு விலகி விட்டார்.
இந்நிலையில், பார்த்திபன் – சீதா மீண்டும் இணைவதற்கான நேரம் வந்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் பார்த்திபன், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தனது முதல் படமான புதிய பாதை படத்தை மீண்டும் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் நடித்தவர்களையே மீண்டும் நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் கூறியிருக்கிறார். அதனால் பிரிந்து போன தனது மனைவி சீதாவை மீண்டும் தனக்கு ஜோடியாக இந்த படத்தில் அவர் நடிக்க வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு சீதா சம்மதிப்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.





