தமிழ் சினிமாவில் அடிக்கடி ஏற்படும் மரணங்கள், ரசிகர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்துகிறது.இரு தினங்களுக்கு முன்புதான் நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நிலையில் இப்போது பிரபல காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 62.
விஸ்வேஸ்வர ராவ் குழந்தை நட்சத்திரமாக 150க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சில படங்களில் காமெடி நடிகராகவும், சில படங்களில் துணைகதாபாத்திரங்களிலும் விஸ்வேஸ்வர ராவ் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி டிவி சீரியல்களிலும் இவர் நிறைய நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உன்னை நினைத்து படத்தில், போலி ஜோஷியராக சார்லி நடித்திருப்பார். விஸ்வேஸ்வர ராவ் வாங்கிய லாட்டரி சீட்டை நியூமராலஜிபடி பார்த்து, அந்த எண் வேண்டாம் என லாட்டரி சீட்டை மாற்றித் தரச்சொல்லி, வேறு லாட்டரி சீட்டை வாங்க வைப்பார். அடுத்த நாள் அவர் முதலில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக 10 கோடி பரிசு விழுந்திருக்கும். அந்த காட்சியில் விஸ்வேஸ்வர ராவ், பெரிய மீசையுடன் அருவாளை எடுத்துக்கொண்டு சார்லியை தேடிக்கொண்டிருப்பார். இந்த காமெடி காட்சியில் சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பார்.
அதே போல் பிதாமகன் படத்தில், கதாநாயகி லைலாவின் தந்தையாக அவர் நடித்திருப்பார். சிவாஜி படத்தில், அமைச்சர் ஹனீபாவின் பிஏவாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதுபோல் ஈ படத்தில் நகை அடகுக் கடை சேட்டுவாகவும் விஸ்வேஸ்வரராவ் நடித்திருப்பார். இப்படி அவர் ஏற்று நடித்தது சின்ன சின்ன கேரக்டர்தான் என்றாலும், அவரது நடிப்பு ரசிகர்களின் மனம் கவர்ந்தது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் மறைவு என்பது தொடர்கதையாக நீடிக்கிறது. நடிகர்கள் விஜயகாந்த், சரத்பாபு, மனோபாலா, மயில்சாமி, விவேக், போண்டாமணி, லொள்ளு சபா சேஷூ, டேனியல் பாலாஜி என முக்கிய நடிகர்கள் பலரும் இல்லாமல் போவது தமிழ் சினிமா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இதிலும் சிலர் துணை நடிகர்களாக நடித்தவர்கள் என்ற நிலையில் திடீரென மறைவது பெருத்த ஏமாற்றத்தை, குடும்பத்தில் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விஸ்வேஸ்வர ராவ் இன்று மாலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள், நடிகர் நடிகையர் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி மறைவு தகவல் இன்னும் பரபரப்பு குறையாத நிலையில், மற்றொரு தமிழ் நடிகர் மறைவு ரசிகர்களை பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.





