நடிகர் விஜய் இப்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடந்தது. அங்கு விஜயை பார்க்க திரண்ட ரசிகர் கூட்டம் குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தக்கட்டமாக இனி, ரஷ்யாவில் 16 நாட்கள் விஜய் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படம் விஜயின் 68வது படம். இதையடுத்து தனது 69வது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்க உள்ளார் என்பது உறுதியாகி விட்டது. இப்போது எடுக்கப்பட்டுள்ள வெங்கட்பிரபு படத்தை பொறுத்த வரை, இதில் அரசியல் கிடையாது. டைம் டிராவல் கதையை அடிப்படையாக கொண்டது.
விஜய் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்து, தமிழக வெற்றிக்கழகம் கட்சியை அறிவித்துள்ள நிலையில், அவரது 69வது படம், அரசியல் களத்தை மையமாக கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எச் வினோத் அதுபோன்ற அரசி்யல் கதைகளில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், நிச்சயம் கதை, திரைக்கதை, வசனங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோட் படத்தின் பீவர் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்து விஜயின் 69வது படம் குறித்த ஆர்வமும் ரசிகர்களிடம் இப்போதே எழத் துவங்கி விட்டது. கோட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று தமிழ் புத்தாண்டில் வெளியாகிறது. தமிழ் புத்தாண்டு நாளில் விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக, இந்த அப்டேட் செய்ய, இயக்குனர் வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளார்.
அதன்பிறகு ஆகஸ்ட் 15ம் தேதி, கோட் படத்தை ரிலீஸ் செய்ய துவக்கத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் அதே நாளில் சுதந்திர தினத்தன்று அல்லு அர்ஜூன் நடித்த பிளாக் பஸ்டர் மூவியான புஷ்பா 2 படம் ரிலீசாக இருப்பதாக அந்த படப்பிடிப்புக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விஜய் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக அதிக வாய்ப்புள்ளது.
அதாவது விஜய் படத்தை, புஷ்பா 2 படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்போ அல்லது அதற்கு பின்போ வெளியிட, படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 10 முதல் 14க்குள், அல்லது ஆகஸ்ட் 16 முதல் 20க்குள் என இந்த நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கோட் படம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு முன்பாக ஜூன் 22ம் தேதி கோட் படத்தின் டிரெய்லர் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.





