தமிழ் சினிமாவில் இன்று விஜய், அஜீத் வரிசையில் மிக முக்கியமான இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் நடிகர் பிரசாந்த். நடிப்பிலும், அழகிலும், திறமையிலும் சிறந்த நடிகராக தன்னை பல படங்களில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பிரசாந்த், இப்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
கடந்த 1990களில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் பிரசாந்த், நடிகர் தியாகராஜனின் மகன். அவரும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர். மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், தீச்சட்டி கோவிந்தன், நீங்கள் கேட்டவை போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.
அதனால் தனது மகனை நடனம், சண்டை பயிற்சி என தேவையான பயிற்சிகளை முன்கூட்டியே தந்து ஒரு தகுதியான கலைஞனாக தயார்படுத்திய பிறகுதான் சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அரும்பு மீசை நாயகனாக வைகாசி பொறந்தாச்சு படத்தில் நடித்த பிரசாந்த் தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடித்தார்.
அதன்பிறகு திருடா திருடா, செம்பருத்தி, ஆணழகன், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், சாக்லேட், பார்த்தேன் ரசித்தேன், வின்னர், அப்பு என பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். 2005ம் ஆண்டில் கிரஹலட்சுமி என்ற பெண்ணை பிரசாந்த் திருமணம் செய்தார். ஆனால் திருமணத்துக்கு பிறகுதான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை தெரிய வந்தது.
அதன்பிறகு கோர்ட், வழக்கு, விவாகரத்து என்று தொடர்ந்த பிரச்னைகளால் பிரசாந்த் இமேஜ் பயங்கரமாக டேமேஜ் ஆனது. சினிமாவில் அவருக்கு இருந்த ஆர்வமும் விட்டுப் போனது. அதன்பிறகும் ஜாம்பவான், மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற சில படங்களில் நடித்த பிரசாந்த், பிறகு 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், விஜய் நடிக்கும் கோட் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகிறார். அதுமட்டுமின்றி, பிரசாந்துக்கு 51 வயதான நிலையில், இரு தினங்களுக்கு முன் அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை தனது மகனுக்கு பரிசளித்த நடிகர் தியாகராஜன், மற்றொரு அதிரடி முடிவையும் எடுத்துள்ளார். அதாவது பிரசாந்துக்கு 2வது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். அவருகு்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக உறவுக்கார பெண் ஒருவரை பார்த்து பேசி முடிவு செய்துள்ள தியாகராஜன், விரைவில் இந்த விஷயத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.





