இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய இயக்குனராக இருந்து வருகிறார். பல நல்ல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறார்,பீட்சா, ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இறைவி, பேட்ட என பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக பேட்ட படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யாவின் 44வது படம் உருவாகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்தமானில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த உறியடி விஜயகுமார், இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்பே விலகி விட்டார்.
இந்த படத்தின் கதாநாயகன் சூர்யா ஏற்கனவே, வணங்கான் படத்தில் ஒரு மாதம் நடித்துவிட்டு டைரக்டர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். பிறகு சூர்யா கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கிறார். அந்த படம், விரைவில் வெளியாக இருக்கிறது. வாய் பேசாத அந்த கேரக்டரில் அருண் விஜய் நடிப்பு வேற லெவல் என்று சொல்லப்படுகிறது.
வணங்கான் படத்தை போலவே, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டிய புறநானூறு படத்தில் இருந்தும், சூர்யா திடீரென விலகி விட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை மையமாக கொண்ட இந்த கதையில் நடிக்க, நடிகர் சூர்யா சரியாக ஒத்துழைக்கவில்லை. கதையில் திருத்தம், மாற்றம் என டைரக்டரிடம் குறுக்கீடு செய்ததால், அந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனது. இப்போது அந்த கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
ஏற்கனவே சூர்யா நடித்த படங்கள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் வணங்கான், புறநானூறு என்ற இரண்டு முக்கிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவரே கெடுத்துக்கொண்டது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்தது. அத்துடன் வாரணம் ஆயிரம் போன்ற வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் கௌதம் மேனனுடனும் சூர்யா இணக்கமாக போகவில்லை.
இந்த சூழலில் இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துவரும் நடிகர் சூர்யா, இப்போது அவருடனும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனருடன் ஒத்துப் போகாமல் சூர்யா காட்டும் அடாவடியால், இயக்குனர் அப்செட்டில் இருக்கிறார். அதனால் தனது 44வது படத்தில் சூர்யா நடிப்பதும் கேள்விக்குறிதான். விரைவில் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இருந்தும் சூர்யா விலகி விட்டதாக தகவல் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.





