சமீப காலமாக, மலையாள படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியாகும் மலையாள படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவளித்து, மாபெரும் வெற்றி பெறச் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம், ஆடுஜீவிதம், மஞ்சும்மெல் பாய்ஸ் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கின்றன.
இப்படி மலையாள படங்கள் தொடர்ந்து வெற்றி பெறும் நிலையில், தமிழ் சினிமாவில் நடப்பாண்டில், 2024 ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்கள், தமிழில் ரிலீஸ் ஆன நிலையில், ஒரு படம் கூட மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்பதே உண்மை.
இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் அனைத்துமே தோல்வி படங்களாக அமைந்தன. கேப்டன் மில்லர் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தாலும் அந்த படம் விமர்சன ரீதியாக வன்முறை படமாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது. குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க முடியாது என்றே வெளிப்படையாக பலரும் விமர்சித்தனர்.
அயலான் படம் துவக்கத்தில், ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து விடும் என்று கூறப்பட்ட நிலையில், சில தினங்களில் அந்த படத்துக்கு ரசிகர் கூட்டம் வெகுவாக குறைந்து போனது. ஏனெனில், ஏலியன் கதாபாத்திரத்தை சரிவர டைரக்டர் பயன்படுத்தவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், சமீப காலமாக மலையாளத்தில் வெளியாகும் படங்கள் பலவும் தமிழில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த பிப்ரவரி 22ம் தேதி ரிலீசான மஞ்சும்மெல் பாய்ஸ், ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், இதுவரை உலக அளவில் 225 கோடி வரை வசூலில் சாதனை புரிந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 5ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்று படம் வெளியாகவில்லை. ஆனால் ஹனுமன் படம் வெளியானது. இப்போது உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. மஞ்சும்மெல் பாய்ஸ் 20 கோடி ரூபாய்க்கு ஓடிடி உரிமம் விலைக்கு விற்கப்பட்டு, வரும் மே 3ம் தேதி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





