தமிழ் சினிமா மிகப்பெரிய வெற்றிப்பாதையில் போய்க் கொண்டிருப்பது போலவும், பல விதங்களில் பட வாய்ப்புகள் பெருகி சினிமாத்துறை சார்ந்தவர்கள் பெரிய வருமானம் பெற்று மிக வசதியாக வாழ்வது போலவும் சினிமாத் துறை சார்ந்த அனைவருமே, கோடி கோடியாக சம்பாதித்து கார், பங்களா என வசதியாக வாழ்வது போலவும் தமிழ் சினிமா ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல என்பதுதான் கசப்பான உண்மை.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்போதைய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பது மாஸ் ஹீரோக்கள் மட்டும்தான். அதாவது முன்னணியில் உள்ள குறிப்பிட்ட பத்து நடிகர்கள் தான் தொடர்ந்து பல வாய்ப்புகளைப் பெற்று நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் பெரிய பட்ஜெட் படங்கள்தான். 200 கோடி 300 கோடி ரூபாய் என்ற பட்ஜெட்டில் உருவாகும் பான் இந்தியா படங்களில் மட்டுமே அவர்கள் நடிக்கிறார்கள்.
5 கோடி முதல், 15 கோடி 20 கோடி என குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படம் தயாரிக்க வாய்ப்பு இன்றி முடங்கிப் போய் உள்ளனர். இதனால் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருமானம் பார்த்துக் கொண்டிருந்த துணை நடிகர்கள், இதர நடிகர்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லாமல், வேறு வேலைகளை தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தில் 4 படங்கள் புதிதாக துவங்க பட பூஜை நடந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஒரே ஒரு படம் மட்டும் பூஜை நடந்துள்ளது. முதலில் சென்னையில் நடந்த படப்பிடிப்புகளில் இப்போது 30 சதவீதம் படப்பிடிப்பு கூட நடப்பது இல்லை. இப்போது வரக்கூடிய படங்கள் அப்டேட் அனைத்துமே தெலுங்கு தயாரிப்பு படங்களாக மட்டும்தான் இருக்கின்றன. அதாவது தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் தமிழ் படங்கள்தான் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக காத்திருக்கின்றன.
இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில், பெரிய நடிகர்கள் படம் மட்டுமே ரிலீசாகும். சின்ன படங்களில் நடிக்க நடிகர்களும், அந்த படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவின் நிலை இன்னும் மோசமான அதல பாதாளத்துக்குச் சென்றுவிடும் என்பதுதான் கசப்பான உண்மை..
தமிழ் சினிமா ஹீரோக்கள், பல நூறு கோடிகளை சம்பளமாக சுருட்டுவதில்தான் கவனமாக இருக்கின்றனர். சிவகார்த்தியேகன் நடிக்கும் புதிய படத்தின் பட்ஜெட் 100 கோடி. அதில் அவரது சம்பளம் 40 கோடி, டைரக்டருக்கு 20 கோடி, இசையமைப்பாளருக்கு 10 கோடி, பிற நடிகர், நடிகைகளுக்கு 10 கோடி சம்பளம் என்றால், மீதி 20 கோடியில் தயாராகும் அந்த படம் எந்த தரத்தில், எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள புரிந்துக் கொள்ளலாம். இளையராஜா கேரக்டரில் நடிக்கும் தனுஷ் சம்பளம் ரூ. 50 கோடி. உடனடியாக தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளத்தை வெகுவாக குறைக்க வேண்டும். படத்தின் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே நடிகர்கள் சம்பளம் என்ற முடிவை கொண்டு வந்தால் மட்டுமே தமிழ் சினிமா தப்பி பிழைக்கும்.





