கூட்டத்தில் ஒருவன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஞானவேல். இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். இதன் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வித்தியாசமாக இருந்ததால் படத்தின் மீது ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை.
தொய்வான திரைக்கதையால் அந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. படத்தின் இயக்குனர் ஞானவேலும் பெரிதாக பேசப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவுடன் இணைந்தார். ஆனால் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவே இல்லை. கடைசி நேரத்தில் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் அமேசான் தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியிடப்பட்டது. சூர்யா, மணிகண்டன், லிஜோமல் ஜோஸ், ரசிஜா விஜயன் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருந்தனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதற்கு முக்கிய காரணம் ஞானவேலின் அற்புதமான திரைக்கதை தான். சொல்ல வந்த விஷயத்தை எந்தவித சமரசமும் இன்றி உண்மையை அப்படியே தோல் உரித்து காட்டியதால் கவனம் பெற்றார் இயக்குனர் ஞானவேல். அதிலும் படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன், சில நிமிடங்கள் தான் படத்தில் வந்தாலும் அந்த கேரக்ட்டர்க்கான உயிர்ப்பை கொடுத்திருப்பார்.
படத்தில் இடம்பெற்ற அனைவரும் பிரமாதமாக நடித்திருந்ததால், ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவில்லையே என்ற ஒரு சின்ன குறை மட்டும் தான் இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வேட்டையன் படத்தை ரஜினிகாந்தை வைத்து ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாபச்சன் மஞ்சு வாரியர் பகத் பாசில் ராணா ரித்திகா சிங் துஷாரா விஜயன் என ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.
இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞானவேலின் அடுத்த திரைப்படம் குறித்த தகவலும் கசிந்துள்ளது. அவர் தெலுங்கு நடிகர் நானியுடன் இணையப் போகிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறதாம். இந்தத் தகவலால் உற்சாகமடைந்துள்ள நானியின் ரசிகர்கள் இது என்ன மாதிரியான கதை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





