நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி கூலி படம் உலகம் முழுவதும் ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அதுவும் கதை திரைக்கதையில் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். படம் முழுவதும் லாஜிக் மிஸ்டேக் நிறைந்து இருந்ததை பார்த்து ரசிகர்கள் கடும் விரக்தியடைந்தனர்.
இதற்கிடையே கூலி படம் குறித்து வேண்டுமென்றே விஜய் ரசிகர்கள், நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் அது உண்மை அல்ல. ஜெயிலர் படம் போல 10 சதவீதம் கூட கூலி படத்தில் மாஸ் இல்லை என்பதை ரஜினி ரசிகர்களே வெளிப்படையாக கூறி விட்டனர்.
50 ஆண்டுகளுக்கு முன் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படத்தின் ரீசன்ட் வெர்சன் என்று விமர்சிக்கப்பட்ட ஜெயிலர் படம் கூட கூலி படத்துடன் ஒப்பிடும் போது சிறந்த படமாக இருக்கிறது என்று சினிமா விமர்சகர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலமை போய்விட்டது. வெறும் நட்சத்திர கூட்டத்தை மட்டுமே நம்பி வெறும் பில்டப் காட்சிகளை படமாக்கி ரசிகர்களை லோகேஷ் கனகராஜ் ஏமாற்றிவிட்டார் என்பதே உண்மை.
இதற்கிடையே முதல் நாளில் ரூ. 151 கோடி, 2ம் நாளில் ரூ. 230 கோடி 3ம் நாளில் ரூ. 310 கோடி 4ம் நாளில் ரூ. 404 கோடி என கூலி படத்தின் வசூல் எகிறிய நிலையில் இப்போது 465 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. குறிப்பாக 10 நாட்கள் ஆகியும் கூலி படத்தின் வசூல் இன்னும் 500 கோடி ரூபாயை கூட எட்டாமல் தட்டுத்தடுமாறி கொண்டிருப்பது ரஜினி ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.
இந்நிலையில் கேரளம் மாநிலத்தில் கூலி படத்துக்கு மலையாள ரசிகர்களிடையே பெரிய வரவேற்பும் ஆரவாரமும் இருந்தது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் 1 கோடி ரூபாய் வரை டிக்கெட் விற்பனை நடந்ததாகவும் தகவல் வைரலானது. ஆனால் இப்போது கூலி படம் கேரளாவில் படுதோல்வியை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு மொக்கை படமா என்ற மலையாள ரசிகர்கள் நொந்து போயிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் கூலி படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிவிடும். அதில் தியேட்டர் ஷேர் ஆக மட்டுமே சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு 100 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் கூலி படத்தின் வசூல் 130 கோடி ரூபாய் வரை மட்டுமே நடந்துள்ளது. இதுவும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆக மொத்தத்தில் கூலி படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டுவதே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.





