நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தம்பி நடிகர் கார்த்தி என்பதும் கவனிக்கத்தது.
நடிகர் சூர்யா துவக்கத்தில் நடிக்க வந்த புதிதில் பள்ளி மாணவன் போல் இருக்கிறார் என்று அப்போது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். அவருக்கு கேமரா முன்பு நிற்கவும், நடக்கவும், வசனங்களை பேசவும், நடனமாடவும் தெரியாமல் தடுமாறிய ஆரம்ப கட்ட நாட்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் இயக்குனர் வசந்த் போன்றவர்கள் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற படங்களில் சூர்யாவை நடிக்க வைத்தனர்.
ஆனால் சூர்யாவை ஒரு நடிகராக உருவாக்கியவர் இயக்குனர் அமீர்தான். அவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். இந்த படம் இப்போதும் காதல் அடையாளம் சொல்லும் முக்கிய படமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அதன் பிறகு நடிகர் சூர்யாவை ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குனர் பாலாவுக்கு உண்டு. அவர்தான் நந்தா என்ற படத்தில் நடிகர் சூர்யாவை ஹீரோவாக மாற்றி காட்டினார்.
அதன் பிறகு காக்க காக்க, வாரணம் ஆயிரம், கஜினி, ஏழாம் அறிவு, சிங்கம், வேல் போன்ற படங்கள் சூர்யாவை மிகப் பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் உருவாக்கியது. இப்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும், அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார். ஆனால் சூர்யா இந்த படங்களில் நடிப்பாரா மாட்டாரா என்று பல குழப்பமான தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஜோதிகா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் புதிதாக நடிக்க உள்ள ஸ்ரீகாந்த் என்ற படத்தில் பிரமோ நிகழ்ச்சிக்காக அவர் கலந்து கொண்ட போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜோதிகா கூறுகையில், சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தின் காட்சிகளை பார்த்தேன். மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
சூர்யா ஒரு அற்புதமான மனிதர். 200 சதவீதம் உழைப்பை படத்திற்காக கொடுத்திருக்கிறார். நான் அவரை திருமணம் செய்ய இதுகூட காரணமாக இருக்கலாம். சினிமா மட்டுமின்றி கணவனாகவும், தந்தையாகவும் 200 சதவீத ஈடுபாட்டை காட்டக் கூடியவர் சூர்யா என்று ஜோதிகா வெளிப்படையாக இந்த நேர்காணலில் தனது கணவர் சூர்யா குறித்து பேசி இருக்கிறார். இது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





