திருமண வாழ்க்கைக்கு பிறகு நயன்தாராவிற்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி படங்கள் எதுவும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த ஆண்டு அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.
இதேபோல் இந்தி திரையுலகில் கதாநாயகியாகவும் கடந்த ஆண்டு நயன்தாரா அறிமுகம் ஆகி இருந்தார். அட்லி இயக்கத்தின் ஜவான் திரைப்படத்தின் அவர் நடித்திருந்தார். தமிழில் இது மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்தியில் ஷாருக்கான் ரசிகர்கள் அதனை கொண்டாடியதால் அந்தத் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.
இருப்பினும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று ஒரு பேச்சு எழுந்தது. படத்தில் சிறிய நேரமே வந்தாலும் தீபிகா படுகோனுக்கு தான் அழுத்தம் மிகுந்த காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக பலர் கூறியதால் நயன்தாரா அதிருப்தியில் இருந்தார்.
இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் அவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்துக்கடவுளுக்கு எதிராக அந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறி பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில், இந்து அமைப்பினர் வழக்கும் தொடர்ந்தனர்.
இந்த விஷயம் மிகவும் பூதாகரமாக வெடித்த நிலையில், அன்னபூரணி விவகாரத்தில் நயன்தாரா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். தனது கடிதத்தில் அவர் ஜெய் ஸ்ரீராம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக எப்படியாவது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் புதிய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதில் அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில், மண்ணாங்கட்டி படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். 1960களில் காலகட்டத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நயன்தாராவுடன், யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில், கே ஜி எஃப் நடிகர் யஸ் அடுத்த திரைப்படம் ஆன, டாக்ஸிக் படத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளப் பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் இந்த திரைப்படத்தில், யஸ்ஸிற்கு சகோதரியாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





