தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சில நடிகர்கள், நடிகைகள் இருக்கின்றனர். அந்த கதாபாத்திரங்களால் அவர்களுக்கு பெருமையா, அவர்களால் அந்த கதாபாத்திரங்களுக்கு பெருமையா என பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு நடிப்பில் வேற லெவல் காட்டி ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள். அப்படிப்பட்ட திறமை, சில கலைஞர்களுக்கு மட்டும் கைகூடும் என்றால் அது மிகையல்ல.
நடிகை வடிவுக்கரசி, கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷின் மனைவியாக நடித்த போதே, பலரது கவனத்தை ஈர்த்தவர். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், முதல் மரியாதை படத்தால் சிவாஜி கணேசன் மனைவியாக பொன்னாத்தா கேரக்டரில் நடிப்பில் பிச்சு உதறியிருப்பார். சிவாஜி கணேசன் மீது அதிக அனுதாபமும் பரிவும் ரசிகர்களுக்கு ஏற்பட காரணமே, வடிவுக்கரசி கேரக்டரில் வெளிப்பட்ட பொன்னாத்தாவின் கொடூர முகம்தான்.
அடுத்து, படையப்பா படத்தில் ரஜினியின் பாட்டி கேரக்டரில் ரஜினியை மிக மோசமாக விமர்சிக்கும் கூனி கிழவியாக நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தொடர்ந்து பல படங்களில் அக்கா, அண்ணி, அம்மா, மாமியார் வேடங்களில் நடித்தவர், இப்போது டிவி சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் நடிக்கவே செய்கிறார். இப்போது சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தில், வடிவுக்கரசி நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்பட, நடிகை வடிவுக்கரசியும் கலந்துக்கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய நடிகை வடிவுக்கரசி, நான் இதுவரை பல நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் சிவகார்த்திகேயனுடன் மட்டும் நடிக்க முடியவில்லை. பலமுறை இதுகுறித்து நான் சிவகார்த்திகேயனிடம் பேசினேன். ஒவ்வொரு முறையும் அடுத்த படத்தில் நடித்து விடலாம் என்ற சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, இதுவரை அவரது படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தி பேசினார்.
இதையடுத்து அங்கிருந்து மேடைக்கு ஓடிவந்த சிவகார்த்திகேயன், வடிவுக்கரசியின் கைகளை பிடித்து அடுத்த படத்தில் கண்டிப்பாக என்னுடன் நீங்க நடிக்கறீங்க, என்று உறுதியாக கூறவிட்டுச் சென்றார். என்னதான் சீனியர் நடிகையாக இருந்தாலும், இப்படியா பிரபல நடிகரை மேடையில் குற்றம் சுமத்துவது போல் பேசுவது என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், வடிவுக்கரசியை வசைபாடி வருகின்றனர்.





