நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக தன்னை நிரூபித்தவர். இனிமேல் புதிதாக அவர் நடித்துதான் அவரது திறமையை காட்ட வேண்டும் என்றில்லை. ஏனெனில் ஏற்கனவே கலையின் பல எல்லைகளை, சிகரங்களை தொட்டவர் அவர். கலைத்துறையில் அவரது நிழலை கூட யாரும் நெருங்க முடியாது என்னும் அளவுக்கு பல சாதனைகளை புரிந்தவர்.
அவரது சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை, விமர்சனங்களை அவர் சந்தித்தாலும் சினிமாவை பொருத்த வரை கலைஞானியாக, உலக நாயகனாக அவரது வெற்றிகளும், சாதனைகளும் சினிமாவில் சரித்திரமாக இருக்கின்றன. என்றாலும் 69 வயதிலும் இன்னும் நடிப்பில் தன் உயரங்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் கமல்ஹாசன்.
மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான மூத்த நடிகர் கமல்ஹாசன் என்ற நிலையில், படத்தில் அவர் ஏற்று நடிக்கிற கேரக்டர்களில் கொஞ்சம் அதீத கவனம் செலுத்துவது மிக நல்லதாக இருக்கும். ஆனால் இப்போதும் உத்தமவில்லன், விஸ்வரூபம் போன்ற படங்களில் காதல் காட்சிகளில், உதட்டு முத்தக் காட்சிகளில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வெளிவந்த விக்ரம் படத்தில், குட்டியும் பத்தல, புட்டியும் பத்தல மத்தளம் அடிடா டோய் என சொந்தக் குரலில் பாடி, மது குடித்தபடி ஆட்டம் போட்டிருந்தார் கமல்ஹாசன். இந்த வயதில், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துக்கொண்டு இப்படிப்பட்ட காட்சியில் நடிக்கலாமா, என பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இப்போது மணிரத்னம் இயக்கத்தில், தக்லைப் படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கமல்- சிம்பு இருவரை மையப்படுத்திய கதையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். வழக்கமான தனது பாணியில் இருந்து விலகி, இந்த படத்தை லோக்கல் மசாலா படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம்.
இதில் டாஸ்மாக் மதுபானக் கடை பாரில், கமலும் சிம்புவும் குடித்துவிட்டு போதையில் ஆடுவது போல், ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அட மீண்டும் கமல் விமர்சனத்தில் சிக்கிக் கொண்டாரா, துணைக்கு சிம்புவும் இருக்கிறாரா, என சினிமா விமர்சகர்கள் இப்போதே கலாய்க்க துவங்கி விட்டனர். தனது வயது, சீனியாரிட்டி, அரசியல் தலைவர் பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப கமல் நடிக்கலாமே என்றும் கூறுகின்றனர்.





