நடிகர் விஜய் சேதுபதி நல்ல திரைக்கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். ஆகச் சிறந்த நடிகராக, பல படங்களில் நடித்து தன் நடிப்பாற்றலை மக்களின் ரசனைக்கு தந்தனர். துணை நடிகராக அறிமுகமாகி, நடிகராகி, வில்லனாகி, குணச்சித்திர கேரக்டர் என, எல்லாவிதமான நடிப்பிலும் தனிமுத்திரை பதிக்க கூடியவர்.
ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என முன்னணி ஹீரோக்களுடன் வில்லனாக நடித்து அசத்திய விஜய் சேதுபதிக்கு, கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப் படங்கள் அமையவில்லை. தொடர்ந்து அவரது படங்கள் பிளாப் ஆன நிலையில், அவருக்கான பட வாய்ப்புகளும் வெகுவாக குறைந்து போய் விட்டன.
அதுமட்டுமின்றி, ஒரு நடிகர் கதாநாயகன் என்றால் அந்த கேரக்டரில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, விஜய் சேதுபதி ஒரு படத்தில் நாயகனாக, ஒரு படத்தில் வில்லனாக, ஒரு படத்தில் கேமியோ ரோலில் நடிப்பது, அவரது ரசிகர்களை பலத்த குழப்பத்திலும், ஏமாற்றத்திலும் பல நேரங்களில் தள்ளி விடுகிறது. இதை ஒரு நேர்காணலில் விஜய் சேதுபதியே வெளிப்படையாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் விஜய் சேதுபதியில் நடிப்பில் அவரது 50வது படம் மகாராஜா விரைவில் திரைக்கு வர உள்ளது. குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நிதிலன் சாமிநாதன், இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் கடந்த வாரத்தில் டிரெயிலர் வெளியாகி, லட்சுமியை காணோம் என்ற அந்த டயலாக்கும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. இப்போது மகாராஜா படம் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டும் வெளியாகி உள்ளது.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, முனிஸ்காந்த், பாரதிராஜா, சிங்கம்புலி, வினோத் சாகர், பிஎல் தேனப்பன் உள்ளிட்டோரும் நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் குறித்து போஸ்டர் வெளியிட்டுள்ள படக்குழு, வரும் 14ம் தேதி மகாராஜா படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.





