தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இவர் இயக்கிய ஐந்து திரைப்படங்களுமே வசூல் ரீதியாக பணத்தை வாரி குவித்தன. இருப்பினும் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்தது.
இருப்பினும் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் இயக்குனராக வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக அவர் அறிமுகப்படுத்திய என் சி யூ கான்செப்ட் தமிழ் சினிமாவில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. குறிப்பாக இதற்காகவே அவருக்கு ரசிகர் பட்டாளம் சூழ ஆரம்பித்தது.
இந்த நிலையில் தற்போது அவர் ரஜினியை வைத்து படம் பண்ண இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக அதில் அனிருத் தீமில் டிஸ்கோ டிஸ்கோ பிஜிஎம் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இளையராஜாவின் பழைய பாடலை தழுவி இது அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக இசையமைப்பாளரை வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, படத்திற்கான வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதன் சூட்டிங் ஆரம்பம் ஆவதாக இருந்தது. ஆனால் வேட்டையன் திரைப்படத்திற்கு டப்பிங் பணிகளை முடிப்பதற்காக, ரஜினி பிஸியாக இருப்பதாலும், இன்னும் கதை முழுமையாக முடிக்கப்படாததாலும் சூட்டிங் தள்ளிப் போகிறது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
கூலி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிப்பது உறுதியாகி உள்ளது. படத்தில் சத்யராஜ் ரஜினிக்கு நண்பராக வருகிறார். இதுபோக கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசனும் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் படத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பகத் பாசிலுக்கு இதில் முக்கிய கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளாராம். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு பகத் பாசில், மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.





