தமிழ் சினிமா நல்ல நிலைமையில் இருப்பதாகவும், பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் தொடர்ந்து நடப்பதாலும், தமிழ் சினிமா முன்னேற்றப்பாதையில் வேகமாக சென்றுக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல என்பதை தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவு பிரதிபலிக்கிறது.
அதாவது பெரிய நடிகர்களின் படங்களை இயக்குவது பெரிய பெரிய கார்பரேட் தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கின்றன. குறிப்பாக ஆந்திராவில் இருந்து இறக்குமதியாகும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் இப்போது தமிழ் சினிமா படங்களை அதிகமாக தயாரிக்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் வெகுவாக குறைந்துவிட்டனர்.
இதற்கு முக்கிய காரணம், நடிகர்களின் சம்பளமும். இயக்குனர்கள் சொல்லும் மெகா பட்ஜெட் படங்களும்தான். அப்போதெல்லாம், 5 கோடி ரூபாய், அதிகபட்சம் 10 கோடி ரூபாய் படத்தின் மொத்த பட்ஜெட்டே அதிகபட்சமாக இருந்தது. ஹீரோக்கள் சம்பளம், ஒற்றை இலக்க கோடிகளில்தான் இருக்கும். அதாவது 3 கோடி, 4 கோடி ரூபாய் சம்பளம் என்பதே பெரிய விஷயமாக இருந்தது.
ஆனால் இப்போது விஜய் சம்பளம் ரூ. 200 கோடி, ரஜினி சம்பளம் ரூ. 140 கோடி, கமல் சம்பளம் ரூ. 150 கோடி, அஜீத் சம்பளம் ரூ. 163 கோடி, தனுஷ் சம்பளம் ரூ. 50 கோடி, ஜெயம் ரவி சம்பளம் ரூ. 18 கோடி, சூர்யா சம்பளம் ரூ. 45 கோடி, சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 40 கோடி என முன்னணி நடிகர்களின் சம்பளம், தயாரிப்பாளர்களை திக்குமுக்காட வைக்கிறது.
இன்றைய நிலவரப்படி சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் பெறும் விலைகளை டிவி சானல்களும், ஓடிடி தளங்களும் வெகுவாக குறைத்து விட்டன. முன்பெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் பலமடங்கு அதிக விலை கொடுக்கப்பட்ட டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமம் இப்போது பெரிய முன்னணி நடிகர்களுக்கு கூட வெகுவாக குறைத்து விட்டது. பல படங்களை வாங்குவதும் இல்லை. இப்படி சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் அதிக விலைக்கு விற்றதால்தான் தயாரிப்பாளர்களும் ஹீரோக்களுக்கு சம்பளத்தை வாரி வாரி கொடுத்தனர். ஆனால் இப்படி நிலைமை மாறிய பிறகும், அதே சம்பளத்தை பெறவே முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சம்பளத்தை குறைக்கவில்லை.
எனவே, இப்போது தயாரித்துள்ள படங்களை எல்லாம் வரும் தீபாவளிக்குள் முடித்துவிட வேண்டும். புதியதாக பட பூஜை எதுவும் போடக் கூடாது. நடிகர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட சதவீதம் குறைத்த பிறகே, மீண்டும் படப்பூஜை நடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஆனால் இப்படி படப்பிடிப்பை ஸ்டாப் செய்வதால், அதிகம் பாதிக்கப்பட போவது சினிமா தொழிலாளர்கள்தான்.





