நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அவரது 50வது படம் மகாராஜா அமைந்துவிட்டது. ஏனெனில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டிஎஸ்பி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற மெகாஹிட் படங்களை தந்த இயக்குனர் பொன்ராம் இயக்கிய இந்த படம், பயங்கரமாக பிளாப் ஆனது. அதனால் விஜய் சேதுபதிக்கு மார்க்கெட் சரிந்தது.
அதே போல் குரங்குபொம்மை படத்துக்கு பிறகு, டைரக்டர் நித்திலன் சுவாமிநாதனுக்கு 7 ஆண்டுகளாக படம் இயக்கும் வாய்ப்புகளே இல்லாத சூழலில், விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படத்தை இயக்கினார். பேஷியன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்தது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இதுபோல் ஒரு டைரக்டர், முக்கிய நடிகர் படம் பெரிய ஹிட் ஆகி விட்டால், தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்த படத்தை எடுப்பதுதான் வழக்கம். அப்படி எடுக்கப்பட்ட படங்கள் பெரிய ஹிட் தந்திருக்கின்றன. ஆனால், இந்த முறை மாறுபட்ட நிலையில், நடிகர் விஜய் சேதுபதி – இயக்குனர் நித்திலன் கூட்டணி மீண்டும் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நித்திலன் சுவாமிநாதன், அடுத்து மீண்டும் ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு கதையை இயக்க முடிவு செய்திருக்கிறார். இது மிக தவறான முடிவு என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். மகாராஜா போல பெரிய ஹிட் கொடுக்க, பெரிய ஹீரோக்களை வைத்து அடுத்த படம் இயக்குவதுதான் புத்திசாலித்தனம் என்றும் கூறுகின்றனர்.
அதே போல், மகாராஜா படம், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, 15ம் தேதி ரிலீஸ் ஆனது. இதுவரை 7 நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 58 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது மிகப்பெரிய வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடவும் அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் இப்படி ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்த நித்திலன் சுவாமிநாதனின் சம்பளம் முதலில் ரூ. 3 கோடியாக இருந்த நிலையில், மகாராஜா படம் வெற்றிக்கு பிறகு 1 கோடி ரூபாய் மட்டும் அதிகரித்து ரூ. 4 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி போன்றவர்கள் ஜெராக்ஸ் கதைகளை கொடுத்துவிட்டு 50 கோடி, 60 கோடி ரூபாய் என சம்பளத்தை வாங்குகிற நிலையில், ரூ. 4 கோடி சம்பளம் வாங்கும் நித்திலன் சுவாமிநாதனை, பொழைக்க தெரியாத மனுஷனா இருக்காரே, என்றும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.





