கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம், விஷ சாராயமாக மாறியது. இந்நிலையில், அங்கு கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் உயரதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய், அவரது நிவாரத்தொகை அறிவித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவோருக்கு, தலா ரூ 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்ரமணியன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சநதித்து ஆறுதல் கூறினர்.
கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் குறித்து நடிகர் விஷால், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் விஷ சாராயத்துக்கு பலி ஆகின்ற நிகழ்வும், போதைப் பொருட்கள் அதிகரித்த வருவதும் தொடர்கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு முதல்கட்ட நடவடிக்கை எடுத்திருந்தாலும், இந்த துயரமான நிகழ்வுக்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவுக்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல் – என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு, விஷ சாராயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழ்நாட்டில் புழங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குறுதியாக அளித்தார்.
அதன்படி தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைத்திட செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களில் ஒருவனாக, தமிழ்நாடு அரசுக்கு சமர்பிக்கிறேன் என்ற அந்த பதிவில், நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.





