கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும், அது விஷச்சாராயமாக மாறிய நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 30 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், விஷ சாராயம் குடித்த பலருக்கும் பார்வையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ. 50 ஆயிரம் என நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, மா சுப்ரமணியன், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோர், நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நேற்று ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து, பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற கள்ளச் சாராய விற்பனையை தடுக்கவும், விஷ சாராய உயிர் பலிகளை தடுக்கவும், போதை பொருட்கள் புழக்கத்தை தமிழ்நாட்டில் முற்றிலுமாக ஒழிக்கவும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், சில நடிகர்களும், பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்தும் அதில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வோரை கிண்டலடிக்கும் விதமாகவும் அனிதா சம்பத் கிண்டலாக ஒரு பதிவை செய்துள்ளார். அனிதா சம்பத், டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகளாக பணிசெய்து வருகிறார். காப்பான் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக, விஜய் டிவியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சில ஆண்டுகளுக்கு முன், அனிதா சம்பத் ஒரு போட்டியாளராகவும் அவர் கலந்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ள அனிதா சம்பத், நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்போ, டெரரிஸ்ட் நேருக்கு நேர் தாக்கும்போது, நெஞ்சில் குண்டுபட்டு ஹாஸ்பிடல்ல கவலைக்கிடமாக இருக்காங்க பாவம், என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு பயங்கரமான விமர்சனத்தை கிளப்பியுள்ளது. நடிகர் விஜயை கலாய்க்கும் விதமாக, அவர் இப்படி ஒரு பதிவை செய்திருப்பதகவும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நான் நடிகர் விஜய்க்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை. கள்ளசசாராயம் குடித்து மருத்துவமனையில் படுத்திருப்பவர்களை, மீடியாக்கள் தியாகி ஆக்குகின்றன. அதைத்தான் கண்டித்தேன், என்று விளக்கம் அளித்துள்ளார் அனிதா சம்பத்.





