தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க முக்கிய இயக்குனராக இருந்து வருபவர் டைரக்டர் ஷங்கர். இதுவரை தமிழில் பல முக்கிய வெற்றிப் படங்களை தந்திருக்கிறா். இந்திய அளவில் கவனிக்கப்படும் தமிழ் இயக்குனர்களில் ஷங்கரும் மிக முக்கியமானவர். இப்போது அவரது இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கிய படம் இந்தியன். இந்த படத்தின் 2ம் பாகம்தான், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதன் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 படத்தையும் இயக்குனர் ஷங்கர் இப்போதே எடுத்து முடித்துவிட்டார். அந்த படம் வருகிற 2025ம் ஆண்டில், ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்துக்கு பிறகு, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகிறது. இது நீண்ட இடைவெளியாக இருப்பினும் இந்த 2.0 படத்துக்கு பிறகு இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய படங்களை இயக்கியதோடு, தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தையும் ஷங்கர் இயக்கி உள்ளார், அந்த படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. இதில் பாலிவுட் நடிகை கியாரே அத்வானி நாயகியாக நடித்துள்ளார். படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கிறது.
கேம் சேஞ்சர் படத்தை பொருத்த வரை இயக்குனர், ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் என மூன்று தரப்பிலும் சம்பளம் நிர்ணயிக்காமல் பிராபர்ட்டி ஷேர் அடிப்படையில், படத்தின் பட்ஜெட்டை கடந்து படத்துக்கு கிடைக்கிற லாபத்தை பங்கு போட்டுக்கொள்ள முடிவாகி இருந்தது. அதன்படி தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ என 3 பேருக்கும் தலா 33 சதவீத பிராபர்ட்டி ஷேர் என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் ஆரம்பகால பட்ஜெட் 350 கோடி ரூபாய் முதல் 380 கோடி ரூபாய் வரை தீர்மானிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர தொடர, வழக்கம்போல பட்ஜெட் எகிறி விட்டது. வழக்கமாக ஷங்கர் படங்களில் இதுபோன்று திட்டமிட்டதை காட்டிலும் பட்ஜெட் அதிகரிப்பது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை 200 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் அதிகமாகி உள்ளது.
அதனால் யோசித்து பார்த்த படத்தின் ஹீரோ நடிகர் ராம்சரண், இந்த படத்தில் எனக்கு பிராபர்ட்டி ஷேர் வேண்டாம். அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு சம்பளமே கொடுத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, இயக்குனர் ஷங்கர், நடிகர் ராம்சரண் ஆகியோர் அமர்ந்து பேசி, ஆலோசித்து ராம்சரண் சம்பளம் ரூ. 90 கோடி என முடிவாகி உள்ளது. கேம்சேஞ்சர் படம் ரிலீஸாகி, மிகப்பெரிய வெற்றி பெற்று 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தால், அப்போதுதான் ராம்சரண் ரொம்பவும் ஃபீல் பண்ணுவார் என்று அவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





