நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி இப்போது திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ராயன். இது நடிகர் தனுஷ் நடித்த 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தனுஷே எழுதி இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ராயன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
நடிகர் தனுஷை பொருத்த வரை நடிப்பில், ராயன் படத்தில் அதகளம் செய்திருக்கிறார். அவரது நடிப்பில் உள்ள இறுக்கமும், அழுத்தமும் படம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. வழக்கமான, ஜாலியான ஒரு தனுஷை இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் வேறு பரிமாணம் காட்டியிருக்கிறார்.
ராயன் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் போல இந்த படத்தை இயக்கியிருப்பார் என்றுதான் நினைத்துதான் வந்தோம், ஆனால் டைரக்டர் வெற்றிமாறன் படம் போல ராயன் படத்தை இயக்கியிருக்கிறார் என்று படம் வெளியான அன்றே விமர்சித்திருந்தனர். அந்த அளவுக்கு படம், இயக்கம் தெளிவாக இருந்தது.
ராயன் படத்துக்கு கிடைத்த அமோக வெற்றியால், நடிகர் தனுஷ் மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார். ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை இயக்கிய தனுஷ். இரண்டாவது படமாக ராயன் படத்தை டைரக்ட் செய்துள்ளார். அதே போல் தனது அக்கா மகன் ஹீரோவாக நடிக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார். இப்போது மற்றொரு படத்தை டைரக்ட் செய்யும் திட்டத்திலும் தனுஷ் இருக்கிறார்.
இதற்கிடையே ராயன் படம் குறித்த சாதனைகள் விவரங்கள், லேட்டஸ்ட் அப்பேட்டுகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதாவது நடப்பாண்டில் 2024 ஜனவரி துவங்கி, கடந்த 7 மாதங்களில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை பெற்ற படம் ராயன் என்ற சாதனையை நிகழ்ந்துள்ளது. இதுவரை 116 கோடி ரூபாய், உலகளவில் ராயன் படம் வசூலித்திருக்கிறது. அதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் இதுவரை நடித்த படங்களில் இதுதான் மிகப்பெரிய வசூல் புரிந்த படமாகவும் ராயன் உள்ளது.
மேலும், லைப்ரரி ஆப் த அகாடமி ஆப் மோசன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில், ராயன் படத்தின் திரைக்கதை சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி படத்துக்கு அதிக பெருமை சேர்ந்துவரும் நிலையில், சன் பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. சென்சார் போர்டு ஏ சான்றிதழ் தந்த ராயன் படம், இவ்வளவு பெரிய வரவேற்பை, வெற்றியை சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றிருப்பதும் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.





