தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிகர் என்று பெயர் வாங்கியவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் தற்போது, முன்னணி நடிகர்களில் ஒருவராக தடம் பதித்திருக்கிறார். பீட்சா திரைப்படத்தில் தொடங்கிய அவரது வெற்றி பயணம், நீண்டு கொண்டே வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், குறுகிய இடைவெளியில் 50வது படத்தை நெருங்கி இருக்கிறார்.
மகாராஜா என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தை எடுத்த நிகிலன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு இரட்டை கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தில் சலூன் கடைக்காரராக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வந்தார். பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதில் மாஸ்டரில் அவர் ஏற்று நடித்த பவானி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதேபோல் விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு வில்லனாக சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி.
தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கும் விஜய் சேதுபதி, அட்லியின் ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். எடுத்த உடனேயே ஷாருக்கானுக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதிக்கு கொடுத்திருந்தார் அட்லி. ஆனால் அந்த வில்லனுக்கான தாக்கம் கொஞ்சம் கூட இல்லை என்று தமிழ் ரசிகர்கள் கூறினர். அவர் எதற்காக அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்றும் கேள்வி எழுப்பினர்.
தமிழில் ஜவான் திரைப்படம் தோல்வியடைந்தாலும், இந்தியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்த நிலையில், விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ட்ரெயின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, அவர் பாலிவுட்டில் நடித்திருக்கும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர் ஒருவர், தமிழ்நாட்டில் இந்தியை தொடர்ந்து எதிர்த்து தருவதாக கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த விஜய் சேதுபதி, இப்போ எதற்கு இந்த கேள்வி கேக்குறீங்க. தமிழ்நாட்டில் இந்தி மொழியை யாரும் எதிர்க்கவில்லை. திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள் என்று பேசினார். இவரது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.





