நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு நவம்பர் 14ம் தேதி வெளியான படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் வம்சி கிருஷ்ணா ரெட்டி பிரமோத் உப்பலப்பட்டி உள்ளிட்டோர் இந்த படத்தை இணைந்து தயாரித்திருந்தனர். பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை எளிதாக அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கங்குவா படத்துக்கு இசையமைப்பாளர் டிஎஸ்பி என அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார். திசா பதானி நாயகியாக நடித்திருந்தார். நடிகர் அஜீத்குமார் நடித்த வெற்றிப் படங்களை இயக்கி சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து.
ஆனால் கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படக்குழுவுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. நடிகர் சூர்யாவின் நடிப்பு மிக அழுத்தமாக சிறப்பாக இருந்தாலும் படத்தின் கதை திரைக்கதை ரசிகர்களை திருப்தி செய்யாததால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
கடந்தாண்டை பொருத்த வரை மிகவும் மோசமான தோல்வியை தழுவிய 2 பெரிய படங்கள் எதுவென்றால் ஒன்று ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 மற்றொன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸான பிறகு ரூ. 131 கோடி வசூலை மட்டுமே எட்டியிருந்தது. ஆனால் கங்குவா படம் உருவாகும் போதே அந்த படத்துக்கு ஒரு ஜாக்பாட் ஆபர் வந்திருக்கிறது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் அதற்கு சம்மதிக்காததால் வாசல் தேடி வந்த அற்புதமான வாய்ப்பு கைநழுவி போயிருக்கிறது.
அதாவது முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ், கங்குவா படத்தின் நெகட்டிவ் ரைட்ஸ் முழுவதையும் பெற்றுக்கொள்வதாகவும் ரூ. 600 கோடி அதற்கு தருவதாகவும் வியாபாரம் பேசியிருக்கிறது. ஆனால் ரூ. 1000 கோடி கனவில் இருந்த கங்குவா படத்தின் தயாரிப்பாளர்கள் நோ சொல்லி விட்டனர். அதன்பிறகு அந்த படம் வெளியாகி ரூ. 131 கோடியை போராடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.





