ஏஆர் ரகுமான், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான இசையமைப்பாளர். இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகரற்ற இசைக் கலைஞர். ஆஸ்கர் விருது வென்றும் இன்னும் அடக்கத்தின் உருவமாய், பணிவின் சிகரமாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் சிறந்த மனிதராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.
இன்று மத்திய அரசின் 70வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 2022ம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களுக்கான விருதுகள், சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகை நித்யாமேனன் மற்றும் மான்சி பரேக் ஆகியோர் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
சிறந்த தமிழ் படம் உள்ளிட்ட 4 விருதுகளை மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படம் வென்றுள்ளது. இதில் சிறந்த இசையமைப்பாளர் விருதை 7வது முறையாக இசைப்புயல் ஏஆர் ரகுமான் வென்றிருக்கிறார்.; தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஹாலிவுட் என உலக அளவில் இசையமைப்பாளராக புகழ் பெற்ற ஏஆர் ரகுமான் 32 ஆண்டுகளாக இசைத்துறையில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரகுமான் முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளராக தேசிய விருது வென்றவர். அதன்பிறகு மின்சார கனவு, லகான் ( இந்தி), கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களுக்காக ஆறு முறை சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கிறார்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் சிறந்த பாடல்களுக்காக, சிறந்த பின்னணி இசைக்காக என இரண்டு விதமாக பிரித்து, தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அதனால் மாம் என்ற இந்தி படத்தில் பின்னணி இசைக்காகவும், இப்போது பொன்னியின் செல்வன் 1 படத்திலும் அதே விருதை ஏஆர் ரகுமான் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கலைஞர்கள் தங்களது திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கான பெருமைகளும், அங்கீகாரங்களும், மரியாதைகளும் தேடி வரும் என்று சொல்வதுண்டு. அந்த வகையில், சிறந்த இசை கலைஞராக தன்னை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு விருதுகளும் கவுரவங்களும் தேடி வருகின்றன. அதனால் விருதுகளால் பெருமை அடையாமல், விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் ஒரு இந்திய இசைக் கலைஞனாய் இந்தியாவுக்கே பெருமை சேர்க்கிறார் இசைப்புயல் ஏஆர் ரகுமான் என்றால் அது மிகையல்ல.





