தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் சில நடிகைகள் முன்னணி நாயகிகளாக வலம் வந்தனர். குறிப்பாக ரோஜா, மீனா, குஷ்பு, நக்மா ஆகியோர் போட்டி நாயகிகளாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தனர். இதில் ரோஜா, மீனாவுக்கு மத்தியில் கடும் போட்டி இருந்தது. ஆனால் வீரா படத்தில் ரஜினிக்கு ரோஜா, மீனா இருவருமே ஜோடியாக நடித்தனர்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானார் ரோஜா. ஆந்திராவை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெயர் கொண்ட அவரை ரோஜா என பெயர் மாற்றி, தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியே, பிறகு ரோஜாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், பிரபுதேவா, சரத்குமார் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ரோஜா, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்தார். தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைய துவங்கிய பிறகு ஆந்திராவில் அரசியல் களத்தில் குதித்தார். தீவிர அரசியல்வாதியாக மாறினார்.
கடந்த 1998ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த நடிகை ரோஜா, சில ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். பிறகு அங்கிருந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். பிறகு 2014ம் ஆண்டு நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
அதன்பிறகு மீண்டும் 2வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்று மீண்டும் எம்எல்ஏ ஆனார். இறுதியாக கடந்த 2 ஆண்டுகளாக விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜாவுக்கு, ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் பதவி தரப்பட்டது. ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது ஆடுதாம் ஆந்திரா என்ற திட்டத்தின் கீழ். அன்றைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு தரப்பில் ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு விஜயவாடா சிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் விசாரணையை ரோஜாவிடம் போலீஸ் அதிகாரிகள் துவங்க உள்ளனர்.





