ஒரு படம் உருவாவதில் முக்கியமானவர் தயாரிப்பாளர்தான். நடிகர்களை நம்பி பல கோடிகளை, ஸ்டார் நடிகர்களை நம்பி பல நூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்து பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்தான் சினிமா துறையில் முதுகெலும்பாக இருக்கிறார். அதை யாருமே மறுக்க முடியாது.
ஆனால் சமீப காலமாக தயாரிப்பாளர்களை பலவிதங்களில் நஷ்டப்படுத்தும் விதமான செயல்பாடுகளில் நடிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அட்வான்ஸ் வாங்கிவிட்டு படங்களில் நடிக்க கால்ஷீட் தர மறுப்பது, தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பு தளங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்துவது, மிக அதிக சம்பளம் கேட்பது என தயாரிப்பாளர்களை சிக்கலில் தவிக்க விடுகின்றனர்.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டும் விதமாக, இம்மாதம் 16ம் தேதி முதல் புதிய படங்கள் பட பூஜை துவக்க விழா இல்லை என்றும், வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் எந்தவிதமான படப்பிடிப்பும், படம் தயாரிப்பு சார்ந்த பணிகளும் நடக்காது என்றும் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதாவது சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
இதனால் பலவிதங்களில் சினிமா துறை பாதிக்கப்படும். குறிப்பாக சினிமாவை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்று நடிகர் சங்கம் தரப்பில் கூறிய நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கம் தரப்பில் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 11 விதமான நிபந்தனைகளை போட்டுள்ளனர். குறிப்பாக நடிகர்கள் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே துவக்கத்தில் அட்வான்ஸாக தரப்படும். பிறகு 10, 10 சதவீதம் என மீதி சம்பளத்தை தந்து, டப்பிங் பேசுவதற்கு முன் நடிகரின் முழு சம்பளமும் தரப்படும். ஜிம் பாய்ஸ் 10 பேர் முதல் 20 பேர் வரை நடிகர் நடிகைகள் வைத்துக் கொண்டாலும் அவர்கள் சம்பளத்தை அவர்களே தந்துவிட வேண்டும். தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள்.
இனிமேல் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்சர், டிரைவர், உதவியாளர்கள் என யாருக்குமே நடிகர்கள் தரப்பில் வருபவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் தர மாட்டார்கள் உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளை கூறியுள்ளனர். இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் நடிகர் சங்கம் ஓகே சொல்லிவிட்டது. ஆனால் ஸ்டிரைக் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் நடக்கும். இன்னும் இது எழுத்துபூர்வமாக உறுதி செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்தால் மட்டுமே ஸ்டிரைக் விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறிவிட்டனர்.





