தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். கடந்த 1975ம் ஆண்டில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ரஜினிகாந்த் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த நிலையில், அவருக்கு பெரிய அளவில் ஆரம்பகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கவனமும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு 16 வயதினிலே என்ற படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் பரட்டையன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்தார். இந்த படத்தில் ரஜினி நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இதில் சப்பாணி கேரக்டரில் கமலும், மயிலு கேரக்டரில் ஸ்ரீதேவியும் நடித்திருந்தார். கவுண்டமணி அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.
தொடர்ந்து ரஜினி கமல் பல படங்களில் இணைந்து நடித்தனர். மூன்று முடிச்சு, அலாவுதீனும் அற்புத விளக்கும், ஆடுபுலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும், அவள் அப்படித்தான் போன்ற பல படங்களில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், அவர்களுக்கான சம்பளம் உயரவில்லை. இருவரும் இதுபற்றி கலந்து பேசி இனி தனித்தனி பாதைகளில் பயணிப்போம் என்று தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தனி பாதையில் அவர்கள் பயணித்ததால், இப்போது இருவருமே தமிழ் சினிமாவில் இரண்டு மிகப்பெரிய சிகரங்களாக உயர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, வரும் 2025 ஆம் ஆண்டில் 50 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டை தனது சினிமா வாழ்க்கையில் நடிகர் ரஜினிகாந்த் பொன்விழா ஆண்டாக கொண்டாடுகிறார்.
ஆனால் இதுவரை ரஜினிகாந்த் 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நிறைவு செய்தது பற்றி எந்த ஒரு நினைப்பும் அக்கறையோ கவனமோ காட்டாமல் கோலிவுட் வட்டாரம் இருந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் இதுவரை ரஜினிகாந்த் 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கை வெற்றி குறித்து, பொன்விழா நடத்துவது, பாராட்டு விழா நடத்துவது போன்ற எந்த விஷயத்தையும் செய்யாமல் அமைதி காக்கின்றனர்.
இந்திய சினிமாவில் அடையாளமாக ரஜினிகாந்த் இருக்கிறார் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு மனிதராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு மரியாதையை செலுத்தும் விதமாக நடிகர் சங்கமோ அல்லது தயாரிப்பாளர்களோ முன்வந்து ரஜினிக்காக பொன்விழா நடத்த முன்வர வேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.





