நடிகர் தனுஷ் பல வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து அசத்திய தனுஷூக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்த படம் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன். தொடர்ந்து ஆடுகளம், அசுரன், வடசென்னை என வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெற்றி பெற்றார்.
நல்ல நடிகராக தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த தனுஷ், பிறகு படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். பல படங்களில் சொந்த குரலில் பாடவும் செய்தார். அதன்பிறகு படங்களை டைரக்ட் செய்வதிலும் தனுஷூக்கு ஆர்வம் ஏற்பட்டது. முதன் முறையாக ரேவதி, ராஜ்கிரண் நடித்த ப பாண்டி ( பவர் பாண்டி) என்ற படத்தை டைரக்ட் செய்தார்.
இந்த படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், 2வது முறையாக தனது 50வது படம் ராயன், தனுஷ் இயக்கி நடித்தார். அந்த படம் 2 மாதங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ. 155 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் புரிந்தது. இதன்பிறகு 3வது படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
தனுஷ் இயக்கிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருவதால் இப்போது மீண்டும் 4வது படத்தை இயக்க நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார். அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிக்கும் ஒரு படத்தை நடிகர் தனுஷ் இயக்க உள்ளார். டிடி 4 ( தனுஷ் டைரக்டஷன் 4) என சுருக்கமாக குறிப்பிடும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தேனி மாவட்டத்தில் தனுஷ் சில தினங்களாக முகாமிட்டுள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். இதற்காக நடிகர் சத்யராஜ், நடிகர் ராஜ்கிரண் ஆகியோரை வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்த தனுஷ், கதையில் அவர்களது கேரக்டர்களை சொல்லி நடிக்க கமிட் செய்திருக்கிறார். சீனியர் நடிகர்களை வீட்டுக்கு சென்று தனது படத்தில் நடிக்க சம்மதம் பெறுவதை தனுஷ் ஒரு வழக்கமாகவே பின்பற்றி வருகிறார்.
இந்த படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் சம்பளம் ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அத்துடன் மற்றொரு குழப்பமும் தற்போது ஏற்பட்டுள்ளது. ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடிப்பதால் இது ப பாண்டி படத்தின் 2ம் பாகம் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் திரைக்கதையும், கதைக்களமும் வேறு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





