நடிகர் விமல் தற்போது போஸ் வெங்கட் இயக்கத்தில் சார் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு முதலில் மபொசி என்று தான் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் படத்தின் பெயர் சார் என்று மாற்றப்பட்டது. வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை தயாரிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
அண்மையில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ஓரளவு வரவேற்பை பெற்றது. பள்ளிக்கூடத்தில் விமல் ஆசிரியராக நடித்திருப்பதும், கல்வியை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதும் அதன் ட்ரைலரை பார்க்கும்போது தெரிந்தது.
விமலின் திரையுலக பயணத்தில் நல்ல விமர்சனத்தை பெற்ற வாகை சூடவா திரைப்படம் போன்று இதுவும் இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இப்படியான சூழலில் அண்மையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய விமல் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். அதில், கூத்துப்பட்டறையில் இருந்தே விஜய் சேதுபதியை தனக்கு தெரியும் என்றும், தன்னை பல நேரங்களில் அவர் புத்துணர்ச்சி அளித்து ஊக்கம் அளித்து இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் பசங்க திரைப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததே விஜய் சேதுபதி தான் என்று தெரிவித்தார்.
அந்தத் திரைப்படத்தில் தான் நடிக்கும் போது, விஜய் சேதுபதியே பெரிய நட்சத்திரமாக வில்லை என்றும் ஆனால் அந்த சமயத்தில் கூட அவர் தனக்கு உதவினார் என்றும் அவர் கூறியிருந்தார். நானும் இருவரை தூக்கி விடலாம் என்று கை கொடுத்தேன் ஆனால் அவர்கள் காலை பிடித்து வாரி விட்டார்கள் என்று விமல் தெரிவித்திருந்தார்.
அதனால் மற்றவருக்கு உதவும் போதும் அந்த நிலையை பார்த்து தான் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார். விமலின் இந்த பேச்சு அரங்குகளை சிரிப்பலை ஆக்கியது. இருப்பினும் அவர் யாரைக் குறிப்பிட்டு பேசினார் என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் விமல் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியை மையப்படுத்தி தான் இந்த கருத்தை பேசி இருப்பதாக ஆருடம் கூறி வருகின்றனர். இருவருடனும் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.





