பொதுவாக திரையில் பார்த்து பார்த்து ரசித்த நடிகர் நடிகைகளை நேரில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகம் ஏற்படுகிறது. முதலில் அப்படி பார்த்தால் ஆட்டோகிராப் வாங்க தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இப்போது ஆண்ட்ராய்டு போன் கையில் இருப்பதால் உடனடியாக அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இன்னும் சில ரசிகர்கள் நடிகர் அல்லது நடிகையின் கையை பிடித்து இழுப்பது கிள்ளுவது போன்ற அநாகரிகமாக செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ரசிகர்கள் அன்பு தொல்லை என்ற பெயரில் எல்லை மீறி நடந்துக்கொள்வதால் தான் பெரிய நட்சத்திர நடிகர் நடிகைகள் பவுன்சர்களின் பாதுகாப்புடன் பொது இடங்களுக்கு வந்து செல்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக கடந்த 1990களில் வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் அவர் இப்போது 70 வயதுகள் கடந்த நிலையில் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். பாஜக கட்சியிலும் மாநில நிர்வாகியாக முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணலில் பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது, ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நான்கைந்து பேர் நாங்கள் அமர்ந்து சாப்பிட்டுட்டு இருக்கிறோம். எல்லோருமே கலைத்துறை சார்ந்தவர்கள்தான். அப்போது அங்கு நண்பர்களுடன் இருந்த ஒரு ரசிகர், என்னை பார்த்துவிட்டு என்கிட்ட ஆட்டோகிராப் வாங்கவும் போட்டோ எடுக்கவும் வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்.
ஆனால் பக்கத்தில் இருக்கிற அவரோ நண்பர், அவரை என்னிடம் வர விடாமல் தடுக்கிறார். அதை பார்க்கும்போது அவர்கள் பேசுவது எனக்கு தெரிகிறது. அவங்க கிட்டே பணம் இருக்குது. அதே மாதிரி நம்ம கிட்டேயும் பணம் இருக்குது, அவங்களை பார்த்துட்டு எதுக்கு இப்படி துடிச்சுட்டு ஓடறேன்னு அவன் கேட்கிறான். அது நியாயம்தான்.
அவனிடமும் பணம் இருக்கிறது. கிரெடிட் கார்டும் இருக்கிறது. அவனும் சமுதாயத்தில் ஒரு தகுதியான இடத்துக்கு வந்துவிட்டதாக நினைக்கிறான். அதை தவறாக பார்க்காமல் நான் பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டேன். அவன் சொந்த காலில் நிற்கிறேன், எதுக்காக நடிகர்களை பார்த்தவுடன் அவர்கள் பின்னால் ஓடணும் என்கிற மனமாற்றம் அவனுக்கு வந்திருக்கிறது. அதுதான் உண்மை. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.





