நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் என்னும் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த ஞானவேல் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்து இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே இதிலும் பிற மாநிலத்தில் இருந்து முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவருக்குப் பின்னணி குரலை கொடுத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
இதுபோக தெலுங்கு உலகில் இருந்து ராணா வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார். ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ரஜினிக்கு மனைவியாக தாரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர்.
இதில் பகத் பாசிலும் இருப்பது வேட்டையன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து மனசிலாயோ பாடல் வெளியானது. அனிருத் இசையில் எடுக்கப்பட்ட இந்தப் பாடலில் நடனமாடி அசத்தி இருந்தார் மஞ்சு வாரியர்.
பாடலுக்கு மஞ்சு வாரியர் போட்ட ஆட்டமும், துள்ளலான பாடலும் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இன்ஸ்டாகிராமில் ரீல்சை எடுத்துக் கொண்டால் பலரும் தற்போது மனசிலாயோ பாடலை தான் வீடியோவாக எடுத்து வருகின்றனர். வரும் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படியான சூழலில் படத்திலிருந்து டீசர் வெளியாகி இருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் வருகிறார் ரஜினிகாந்த். அதேசமயம் என்கவுன்டர் எதிர்க்கும் அதிகாரியாக அமிதாபச்சன் வருகிறார். தற்போதைக்கு டீசரில் இந்த ஒன் லைனை மட்டும் தான் கூறியிருக்கிறார்கள். இதன் நடுவே வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமர்சையாக தற்போது நடைபெற்று வருகிறது.





