புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் நெருக்கமான நட்பில் இருந்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். என்னுடைய கலையுலக வாரிசு என்று அவரை அறிவித்தார் எம்ஜிஆர். மேலும் அமெரிக்காவில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆரை நேரில் சென்று பார்த்தவர் கே பாக்யராஜ் மட்டும்தான். அவர் ஒருவரை மட்டுமே அமெரிக்கா வந்து தன்னை நேரில் பார்க்க எம்ஜிஆர் அனுமதி தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, ஒருமுறை மீட்டிங் ஒன்றில் பேசும் போது எம்ஜிஆர் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்றார். தேர்தல் வரும்போது எம்ஜிஆருக்கு ஆதரவாக மக்கள் ஓட்டுப் போட வேண்டும் என்பது போல நான் பேசிவிட்டேன். உடனே அருகில் இருந்த எம்ஜிஆர், மைக்கை ஆஃப் செய்து விட்டார்.
அவர் சொன்னது ஆஃப் த ரெக்கார்டு. அதை போட வேண்டாம். நான் சொல்வதை மட்டும் எழுதுங்கள். பாக்யராஜ் என்னுடைய கட்சிக்காரர் கிடையாது. அவர் என்னுடைய ரசிகர் மட்டும்தான் என்று அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டார். அப்போது நான் ஏதோ தப்பாக பேசிவிட்டேன் என்று எனக்கு புரிந்தது.
உடனே என்னுடன் நீ காரில் வா, உன்னுடைய கார் பின்னால் வரட்டும். பாரதி நீங்களும் எங்களுடன் வாங்க என்று இயக்குனர் பாரதிராஜாவையும் அவருடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது 3 பேரும் ஒரே காரில் பயணித்த போது, எதுக்காக நீ அப்படி பிரஸ்மீட்டில் சொன்னே என்று எம்ஜிஆர் என்னிடம் கோபமாக கேட்டார்.
உனக்கு அதிமுக மட்டுமல்ல திமுகவிலும் எத்தனை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள் அவர்கள் எப்படி படம் பார்க்க வருகிறார்கள் என்பது எனக்கு தெரியும். இப்பவும் அவர்கள் உன் படத்தை விரும்பி பார்க்கிறார்கள். நீ என்னுடைய ரசிகனாக மட்டுமே இருப்பதால் தான் உன் படத்தை பாரபட்சமின்றி அனைவரும் பார்க்கிறார்கள்.
நீ என்னுடைய தொண்டன் என்று சொன்னால் எவனும் படம் பார்க்க மாட்டான். அவங்க வீட்டில் குடும்பத்தில் இருக்கிற ஒருத்தரையும் படம் பார்க்க விட மாட்டான். அப்படி பண்ணிடுவான். ஏன்னா திமுக பத்தி எனக்கு தெரியும். அவங்க எல்லாம் என் ரசிகனாக இருந்தவர்கள்தான். நான் கட்சி ஆரம்பிச்சு தனியா போனதால் என்னை பிடிக்கலையே தவிர என்னுடைய ரசிகனாக என்னைக்கும் இருந்துட்டு இருக்கிறான். நீ ரசிகனா இருந்தா பிரிச்சு பார்க்க மாட்டான். நீ தொண்டன்னு சொன்னா படம் பார்க்க மாட்டான் என்று சொன்னார் என அந்த நேர்காணலில் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.





