தமிழ் சினிமாவில் முன்ணனி இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது படங்கள் அதிகளவில் கவனம் பெறும் படங்களாக இருந்து வருகின்றன. 4 படங்களே இயக்கிய போதும் தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்ற ஒரு படைப்பாளியாக இருக்கிறார்.
பரியேறும் பெருமாள், அவர் இயக்கிய முதல் படம். சாதியம் பேசும் படமாக இது இருந்தாலும் படம் ரசிகர்களின் கவனத்தை, வரவேற்பை பெற்ற படமாக வெற்றி பெற்றது. தொடர்ந்து கர்ணன் படம், தனுஷ் நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் போலீஸ் அதிகாரியாக நட்டியின் வில்லத்தனமான நடிப்பு பாராட்டைப் பெற்றது.
தொடர்ந்து காமெடி ரோல்களில் நடித்த நடிகர் வடிவேலுவை, குணச்சித்திர வேடத்தில் மாரி செல்வராஜ் நடிக்க வைத்த படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஹீரோ என்றாலும், படத்தில் அதிக கவனம் ஈர்த்தவர்கள் வடிவேலுவும், வில்லனாக நடித்த பகத் பாசிலும்தான். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த அவரது 4வது படம் வாழை. சிறுவயதில் இருந்த போது அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த 4 படங்கள் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் இருந்தும் அதையும் கடந்து இந்த படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது, எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும். நான் இன்னும் எனது பழைய நினைவுகளுடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். புதியதாக வாழ ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு நான் புதிதாக வாழ்கிறேன் என்றால், அது என் பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கை தான்.
என் மனைவி திவ்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன். எனக்கும், என் மனைவிக்கும் தாலி கட்டி திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லை. ஆனால் என் மாமியார், தாலி கட்டிதான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதனால் விருப்பமே இல்லாமல், கட்டாயத்தால் தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டேன். என்னை பொருத்த வரை, இருமனம் இணைந்தால் போதும். எதற்கு இந்த திருமணம் என்பதுதான் என் எண்ணம், என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.





