நடிகர் கார்த்தி தற்போது மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில், அரவிந்த்சாமி ராஜ்கிரண் ஸ்ரீதிவ்யா உள்பட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். வரும் 27ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன்காக அவர் ஹைதராபாத் சென்றார். மெய்யழகன் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்ற போது, கார்த்தியிடம் தொகுப்பாளர் லட்டு குறித்த கேள்வியை எழுப்பினார். ஏற்கனவே கார்த்தி கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற டயலாக் கூறியிருக்கும் நிலையில், இந்த கேள்வி அவர் முன்பு வைக்கப்பட்டது.
ஆனால் இதற்கு கார்த்தி பதில் அளிக்க மறுத்து விட்டார். லட்டு பற்றி தற்போது பேச வேண்டாம். ஆனால் அது சென்சிட்டிவ் டாபிக் என்று அவர் சிரித்தபடி கூறினார். இந்த ஒரே ஒரு சொல் தான் தற்போது மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பதி லட்டுவில், மாடு பன்றி கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இது குறித்து ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்டு விவகாரத்தில், நடிகரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் கார்த்தியின் பேச்சுக்கும் கண்டனத்தை கூறியிருக்கிறார். சனாதான தர்ம விஷயத்தில் நகைச்சுவை செய்யக்கூடாது என்றும் அவர் காட்டமாக பேசியிருந்தார்.
பவன் கல்யாணின் இந்த பேச்சு திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது. இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் விளக்கம் அளித்த கார்த்தி, பவன் கல்யாண் மீது எப்போதும் மதிப்பு வைத்திருப்பதாகவும், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்திருந்தார். ஏழுமலையானின் பக்தனாக பண்பாடு சார்ந்த விஷயங்களில் தான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் பவன் கல்யாணிடம் கார்த்தி மன்னிப்பு கேட்ட விவகாரம் பெறும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.





