தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் பல படங்களை இயக்கிய பிறகுதான் ரசிகர்களின் கவனம் பெறுகின்றனர், வெற்றி பெறுகின்றனர். ஆனால் சில இயக்குனர்கள் அவர் இயக்கும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றனர். அதுவே அவர்களது அடையாளமாகவும் மாறிவிடுகிறது. இப்படி தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை சொல்ல முடியும்.
ஏனென்றால் முதல் படத்திலேயே தங்களது முத்திரையை பதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன், அவர்கள் தங்களது முதல் படத்தை மிக அழகாக சிறப்பாக தந்து விடுகின்றனர். அந்த வகையில் மண்டேலா படத்தை இயக்கியவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இவர் மண்டேலா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடித்திருந்தார். அவர் ஒரு கிராமத்தில் மரத்தடியில் சலூன் கடை வைத்திருக்கும் ஒரு சாதாரண மனிதராக இருப்பார். அவரை இளிச்சவாயன் என்றுதான் அந்த கிராமத்தில் பலரும் அழைப்பார்கள். அவருக்கு சொந்தமாக பெயர் கூட இருக்காது. ஒரு கட்டத்தில் அவரது பெயர் மண்டேலா என மாற்றப்படும்.
அதன்பிறகு அந்த ஊரில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலில் யோகி பாபுவின் ஒரு ஓட்டுதான் அந்த ஊருக்கு தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் என்ற சூழல் ஏற்படும். மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் அதே நேரத்தில் மிக யதார்த்தமாகவும் கொண்டு செல்லப்பட்ட இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தனது முதல் படமே சிறந்த படைப்பாக கொடுத்த இயக்குனர் அஸ்வின் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய 2வது படம் மாவீரன். சிவகார்த்திகேயன் நடித்த இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதாவது சிவகார்த்திகேயன் காதுக்குள் மாவீரன் குரல் ஒலிக்கும்போது, அதன்படி அவர் செயல்படுவார். மாவீரன் குரலாக ஒலித்தது நடிகர் விஜய் சேதுபதியின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், சுனில், யோகிபாபு, மோனிஷா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
மண்டேலா, மாவீரன் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார். மண்டேலா படம் இந்தியில் வெளியானது. அந்த படத்தை பார்த்த இந்தி படத் தயாரிப்பாளர் கரண் ஜோகர், தனது தயாரிப்பில் ஒரு இந்தி படத்தை இயக்குமாறு மடோன் அஸ்வினுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற மடோன் அஸ்வின், இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தை இயக்க தயாராகி விட்டார். ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணியில் இப்போது ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறது.





