தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். குறிப்பாக அந்த காலத்து காதல் நாயகன் என்றால் நடிகர் முரளிதான். பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். இதில் அவர் நடித்த இதயம் படம் மிகப்பெரிய அடையாளத்தை முரளிக்கு கொடுத்தது.
நடிகர் முரளியின் மகன் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவர் நடித்த பரதேசி சண்டி வீரன் ஈட்டி 100 என பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான பராசக்தி படத்திலும் அதர்வா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இதற்கிடையே டான் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அறிமுகமாகும் படம் இதயம் முரளி. இந்த படத்தில் நடிகர் அதர்வா தான் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
வருகிற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் இந்த படம் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது திடீரென வருகிற ஏப்ரல் மாதத்துக்கு இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
இதற்கு காரணம், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தனது தளத்தில் வெளியாகும் 2026ம் ஆண்டுக்கான திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இதயம் முரளி படமும் உள்ளது. மற்ற சில படங்களை மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஸ்ட்ரீம் செய்ய அந்த ஓடிடி தளம் திட்டமிட்டுள்ளதால் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருந்த இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூறியுள்ளது.
அதன்படி இதயம் முரளி படம் ரிலீஸ் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது நெட்பிளிக்ஸ் ஓடிடி தங்களது படங்களை ஸ்ட்ரீம் செய்ய வசதியாக திரைக்கு வர வேண்டிய ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை 2 மாதங்கள் தள்ளிப் போக செய்துள்ளது. அந்த அளவுக்கு ஓடிடி நிறுவனங்களில் டிஜிட்டல் உரிமத்தை நம்ப வேண்டிய ஒரு நெருக்கடியான சூழலில் தமிழ் படங்கள் இருந்து வருகின்றன என்பது இதில் கவனிக்கத்தக்கது.





