நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
விசாகப்பட்டிணத்தில் நடந்த கூலி படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் இரவில், ரஜினிகாந்த் மழையில் நனைந்தபடி சண்டை போடுவது போல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ரஜினிக்கு பேக் பெயின் ஏற்பட்டுள்ளது அதன் பிறகு கடந்த 30 ஆம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்காக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 3 நாட்களாக டாக்டர்களின் முழு கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று நேற்று தகவல் வெளியானது. இன்னும் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு தான் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிக்கு நடந்த அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து பிரபல இருதய நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் கூறியதாவது, நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கடந்த 50 ஆண்டு கால நண்பர். அவரை பல ஆண்டுகளாக அறிந்தவன். நான் இரண்டு நாட்கள் முன்னதாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். வயிற்று வலி என்று அப்போது கூறப்பட்டது.
உடனே அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் மகா தமனி என்று சொல்லக்கூடிய குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டிருந்தது. உடனடியாக அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் நேற்று மாலை அவரை சென்று பார்த்தேன். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க கவலைதான் காரணம், அடுத்து மன அழுத்தம். இவை இரண்டும் மிக முக்கியமாக தவிர்க்கப்பட வேண்டும். அதற்குதான் உடற்பயிற்சி தேவை.
சரியான உணவு, நல்ல தூக்கம் இது கெடும்போது ரத்த குழாயில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். ரஜினியை பொறுத்தவரை வயதும் ஒரு காரணம். அவர் இப்போது மது அருந்துவதில்லை. புகைபிடிப்பதும் இல்லை. மருத்துவர்கள் தரும் அறிவுரையை சரியாக கடைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். எனவே பிரச்சனை இல்லை என டாக்டர் சொக்கலிங்கம் கூறியிருக்கிறார். ரஜினி குறித்து டாக்டர் சொக்கலிங்கம் சொன்ன இந்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.





