நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து, முன்னணி நடிகராக இருந்து வருபவர். 5 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் சிறுவனாக நடித்து, அறிமுகமானவர். சிறந்த குழந்தை நட்சத்திரமாக அப்போதே விருது பெற்றவர். தொடர்ந்து ஆனந்த ஜோதி படத்தில் எம்ஜிஆருடன் நடித்தார். பிறகு, பார்த்தால் பசி தீரும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அரங்கேற்றம் படத்தில் இளைஞனாக நடிக்கத் துவங்கிய கமல்ஹாசன் பிறகு, பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக மாறினார். ஆரம்பத்தில் மலையாளத்திலும் கமல் பல படங்களில் நடித்தார். இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி, கமல் இருவரும் ஆரம்பத்தில் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய கலைஞனாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் திரைப்பட இயக்கம், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், கவிஞர், பாடல் ஆசிரியர், பாடகர், தொழில்நுட்ப கலைஞர், நடனக் கலைஞர் என பன்முக தன்மைகளை கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு பல அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ததே நடிகர் கமல்ஹாசன்தான்.
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் 2 படம் பெரிய வெற்றியை பெறவில்லை. படம் குறித்து படுமோசமான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தியன் 3 படத்தை மிகச் சிறப்பாக தர கமலும், இயக்குனர் ஷங்கரும் திட்டமிட்டுள்ளனர். இந்தியன் 3 படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் கமல் 45 நாட்கள் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற, இப்போது அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஏஐ தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு வரும் நடிகர் கமல், தக் லைப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஸ்டண்ட் டைரக்டர்ஸ் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தனது லட்சியப் படமான மருதநாயகம் படத்தை, ஏஐ தொழில்நுட்பத்தில் இயக்க கமல் திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல் நடித்த படம் தக்லைப். மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் சிம்பு மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. நடிகர் கமல் பிறந்த நாளான வருகிற நவம்பர் 7ம் தேதி தக்லைப் படத்தின் டிரெயிலரை வெளியிட, இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். அன்று கமல் ரசிகர்களுக்கு அது பிறந்த நாள் பரிசாக உற்சாகப்படுத்தும் என்றும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





