இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் எச் வினோத் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
தளபதி 69 படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் ஏற்கனவே நடிகர் விஜயுடன் பீஸ்ட் என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரேமலு நாயகி மமீதா பைஜூ, பிரியாமணி, நரேன், இயக்குனர் கௌதம் மேனன், வில்லன் கேரக்டரில் பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பதாக, இந்த படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தற்போது கேரளாவில் உள்ள பையனூரில் தளபதி 69 படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. நடிகர் விஜய் பாடிய பாடலுக்கு, பாடல் காட்சி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த பாடல் காட்சி எடுத்து முடிந்த பிறகு நடிகர் விஜய் தனது அரசியல் பணிக்கு திரும்புகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் வருகிற 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்க உள்ள மாநாட்டில் விஜய் பங்கேற்கிறார். அதன் பிறகு நவம்பர் மாதத்தில் தளபதி 69 படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத், அடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்தை இயக்க தயாராக இருந்தார். அந்த படத்தை கமல்ஹாசனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பதாகவும் இருந்தது.
ஆனால் ஓராண்டுக்கு மேல் எச் வினோத் கமல் படத்தை இயக்க காத்திருந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து, நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று எச் வினோத்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார். அந்த படம் ப்ராப் ஆன நிலையில், பின்னர்தான் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69வது படத்தை இயக்கும் வாய்ப்பு எச் வினோத்துக்கு கிடைத்தது.
கமல்ஹாசனுக்காக எழுதப்பட்ட அந்த கதையில்தான் பல திருத்தங்களை செய்து, விஜய் நடிக்கும் தளபதி 69 படமாக உருவாகிறது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது தளபதி 69 படம் குறித்த வேறு தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் பகவன்த் கேசரி படத்தின் கதையை தான் ரீமேக் செய்து விஜய் நடிக்கும் 69வது படமாக உருவாகிறது என்ற கூறப்படுகிறது. இது உண்மையா, வதந்தியா என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் விஜய் 69 படத்தின் கதை, பகவன்த் கேசரி படத்தின் கதையை ஒத்திருப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





