இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகர்களின் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் சல்மான்கான். இவர் இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சல்மான்கானும், மாதுரி தீட்சித்தும் நடித்த ஹம் ஆப்கே ஹை கோன் என்ற இந்தி படம், தமிழ்நாட்டிலும் ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அனுபம்கெர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்களை, எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
சல்மான்கான் இந்தியில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக, இந்தியில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, நம்மூர் கமல்ஹாசனை போல, அங்கு அவர் நடத்தி வருகிறார். இங்கு இப்போது கமலுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். சல்மான்கான் நடத்தி வரும் இந்தி பிக்பாஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போது, இந்தியில் நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதராஜ் என்ற கழுதையை பிக்பாஸ் வீட்டுக்குள் விட்டு, அதை அங்குள்ள போட்டியாளர்கள் சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று ஒரு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து கழுதையை உடனடியாக தங்கள் வசம் ஒப்படைக்குமாறு பிக்பாஸ் நிர்வாகிகளுக்கும், தொகுப்பாளர் நடிகர் சல்மான்கானுக்கும் கடிதம் அனுப்பியது வைரலானது.
பொதுவாக சினிமா நடிகர்களுக்கு நடிப்பதை தவிர வேறு சில பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் இருக்கும். அதுபோல் இந்தி நடிகர் சல்மான் கான், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் அதிக விருப்பம் கொண்டவர். அடிக்கடி துப்பாக்கியுடன் காட்டுக்குள் சென்று விடுவார். கடந்த 1998ம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் தெய்வமாக வணங்கப்படுகிறது.
கருப்பு மான் சுடப்பட்ட விவகாரத்தில் சல்மான்கான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. அதனால் சல்மான் கான் எங்கு சென்றாலும் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல் படையினர் உடன் செல்வது வழக்கம். ஷூட்டிங் ஸ்பாட்களில் கூட சல்மான்கானை சுற்றி பாதுகாப்பு படை உஷாராக இருக்கும்.
தற்போது சல்மான்கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோயுடன் பகையை முடிவுக்கு கொண்டுவர விரும்பினால், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால் சல்மான் கானின் நிலை பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும் என்று அனுப்பியுள்ளனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





