தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் நடிகர் சரத்குமார் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். சூரியன், சாமுண்டி, நாட்டாமை, ஜானகிராமன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தந்திருந்தார். அப்போது விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் 2 வேடங்களில் நடித்த சூரியவம்சம் படம் 1997ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த படத்தில் அப்பா, மகன் என 2 வேடங்களில் சரத்குமார் நடித்திருந்தார். அப்பாவுக்கு ஜோடியாக ராதிகா, மகனுக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜோடியாக நடித்த பிறகுதான் ராதிகா, நடிகர் சரத்குமாரை காதலித்து 3வது திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய வம்சம் படத்தில் பிரியா ராமன், மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன், ஜெய் கணேஷ், பத்மபிரியா, நிழல்கள் ரவி, சிந்து, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் வில்லனாக ஆனந்தராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தேவயானி செய்யும் இட்லி உப்புமா அப்போது வைரலாக பேசப்பட்டது. படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ. சின்ன ரோசாப்பூ பாடலும் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
சூரிய வம்சம் படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரமன் புது வசந்தம், பூவே உனக்காக, வானத்தை போல, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தந்தவர். சூர்ய வம்சம் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்து சமீபத்தில் அவர் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
அதுபற்றி இயக்குனர் விக்ரமன் கூறுகையில், சூர்யவம்சம் படத்தில் ஒரு காட்சியில் திருமண மண்டபத்தில், சரத்குமார் அவர் மட்டுமே தனியாக அமர்ந்து சாப்பாடு சாப்பிடுவது போல் ஒரு காட்சி வரும். அப்போது அங்கு வரும் தேவயானி, அவர் மீது பரிதாபப்பட்டு சரத்குமாருக்கு உணவு பரிமாறுவது போல் காட்சியை படமாக்கினோம். சரத்குமார் சாப்பிடுவதற்காக ஒரு மீல்ஸ் பிரஷ்ஷாக ரெடி பண்ணுமாறு அன்று மதியமே நான் சொல்லி இருந்தேன்.
இரவில் அந்த காட்சியை படமாக்கிய போது, தேவயானி பரிமாறிய சாப்பாட்டை சரத்குமார் சாப்பிடுவது போல் ஷாட் எடுத்தவுடன், ஓடிச்சென்று வாயில் இருந்த சாப்பாட்டை அப்படியே வாஷ் பேசினுக்குள் துப்பிவிட்டார். பிறகுதான், அது கெட்டுப்போன சாப்பாடு, ஊசிப்போய் விட்டது எனத் தெரிந்தது. அது முதலிலேயே தெரிந்திருந்தும் ஷாட் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, என்னிடம் கூட புகாராக சொல்லாமல் அந்த காட்சியில் பர்பெக்ட் ஆக நடித்துக்கொடுத்தார் சரத்குமார் என்று பாராட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரமன். இது தற்போது வைரலாகி வருகிறது.





