வெறும் இரண்டே இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகம் அறியும் ஹீரோவாக உருமாறியவர் யஷ். கேஜிஎப் என்னும் திரைப்படம் தான் அவரது திரை உலக பாதையை மாற்றியது. கன்னட மொழி மட்டுமல்லாமல் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டது.
அதுமட்டுமல்ல கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதற்கு முன்னர் எந்த ஒரு கன்னட திரைப்படமும் இப்படி ஒரு சாதனையை படைக்காத சூழலில், உலகமே திரும்பிப் பார்க்கும் திரைப்படமாக மாறியது கேஜிஎப்.
இந்த நிலையில், பலருக்கும் விருப்ப நாயனாக மாறிய யஷ்-ன், அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்று பலரும் கேட்டு வந்தனர். ஆனால் இது குறித்து நாயகன் தரப்பிலிருந்து அமைதி மட்டுமே பதிலாக இருந்து வந்தது. இப்படியான சூழலில்தான் அவர் மலையாள இயக்குனர் கீது மோகன் தாஸ் உடன் இணைந்தார்.
இந்த திரைப்படத்திற்கு டாக்ஸிக் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இதில் கதாநாயகன் யஷ்ஷிற்க்கு சகோதரியாக நடிக்கிறார் நயன்தாரா. கியாரா அத்வானி, ஹீமா குரேசி உள்ளிட்டோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதன் சூட்டிங் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில் தொடர்ந்து பெங்களூருவில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் போது, பீனியா என்னும் இடத்தில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
இப்படியான சூழலில் தான் டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதாக கூறி வழக்கை தீவிரப்படுத்தி இருக்கிறது வனத்துறை. இச்சம்பவம் கர்நாடக திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





